சொல்றீங்க ஆனா எதையும் செய்ய மாட்றீங்க! செங்கோட்டையனை சுற்றி வளைத்து மாஸ் காட்டிய மாணவிகள்!

ஈரோடு மாவட்ட்டம் கோபியைச் சேர்ந்த மாணவிகள் தங்களுக்கு எப்போது லேப்டாப் கிடைக்கும் எனக் கேட்டு அமைச்சர் செங்கோட்டையனை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


தற்போதைய அமைச்சர்களில் சற்று சின்சியராக பணியாற்றி வருபவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தான். ஸ்மார்ட் கிளாஸ், வண்ணமயமான சீருடைகள் உட்பட தனியார் பள்ளிகளுக்கு இணையான மாற்றங்களை செய்துவருகிறார். கோபியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் தான் மாணவிகளால் முற்றுகையிடப் படுவோம் என சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பள்ளிக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் திரண்ட நிலையில் அவர்கள் அமைச்சரை வரவேற்க வந்திருப்பதாக கருதப்பட்டது தப்புக்கணக்காகிப் போனது. திடீரென அமைச்சரை முற்றுகையிட்ட மாணவிகள் 2017மஆம் ஆண்டே  பிளஸ் 2 முடித்துவிட்டதாகவும் ஆனால் தங்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கப்படவில்லை என்றும் முறையிட்டனர். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் இன்னும் 2 மாதங்களில் அனைவருக்கும் லேப்டாப் கொடுக்கப்பட்டுவிடும் என்றும் அதற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தப்பிக்கப் பார்த்தார். ஆனால் மாணவிகள் விடூவதாக இல்லை. இதையேதான் 2 வருஷமா சொல்லிட்டு வர்றீங்க.. வெறும் அறிவிப்பு மட்டும்தான் இருக்கு..

இப்போ நாங்க பிளஸ் டூ முடிச்சிட்டு காலேஜில்கூட சேர்ந்துட்டோம். இந்த சமயத்துல லேப்டாப் தந்தால் மட்டுமே எங்களால படிக்க முடியும்" என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தர்மசங்கடத்தில் சிக்கிய அமைச்சர் செங்கோட்டையன், நிச்சயமாக 2 மாதங்களில் லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார், 

தாங்கள் பிளஸ்டூ முடித்த பின் தங்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழில் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுவிட்டதாக முத்திரை குத்தப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் அமைச்சரை முற்றுகையிட்டதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.