காட்டிக்கொடுத்த கமிஷனர்! கத்தை கத்தையாக துண்டுச் சீட்டு! RB உதயகுமார் சிக்கியதன் பின்னணி

சென்னையில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் இருக்கும் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று இரவு சுமார் பத்தரை மணியளவில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான விடுதிக்குள் நுழைந்தனர். நேராக அவர்கள் விடுதியில் தீ பிளாக்கில் இருக்கும் பத்தாவது தளத்தில் உள்ள ஆர்பி உதயகுமாரின் 10-E எனும் அறைக்குள் நுழைந்தனர். அப்போது அறைக்குள் அமைச்சரின் உதவியாளர்கள் இரண்டு பேர் மட்டும் இருந்துள்ளனர்.

வந்திருப்பது யார் என்று தெரியாமல் அமைச்சரின் உதவியாளர்கள் இருவரும் அவர்களிடம் முதலில் தகராறு செய்துள்ளனர். பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிந்ததும் அமைச்சரின் உதவியாளர்கள் அடங்கியுள்ளனர். தொடர்ந்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனையிட்டபோது கத்தை கத்தையாக துண்டு சீட்டுகள் இருந்துள்ளன. அதில் குறிப்பிட்ட சில அதிமுக முக்கிய புள்ளிகளின் பெயர்கள் மற்றும் தொகைகள் சங்கேத வார்த்தைகள் குறிக்கப்பட்டிருந்தன.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அந்தத் துண்டு சீட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டனர். பிரச்சனை இத்தோடு முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில்தான் அதிகாரிகள் சென்ற வேகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாருக்கு சம்மன் வந்துள்ளது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள தங்கள் அறையில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டுகள் குறித்து விசாரிக்க வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உதயகுமார் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகிறார். இந்த நிலையில் அமைச்சரின் எம்எல்ஏ ஹாஸ்டல் அறையில் இது போன்ற ஒரு வேலை நடக்கிறது என்கிற தகவலை வருமான வரித்துறைக்கு தெரிவித்ததே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அமைச்சர் உதயகுமார் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டு உள்ளார் என்றும் பேசப்படுகிறது.