தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணையை தடுத்து நிறுத்துங்கள்! திருமா ஆவேசம்!

தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்குத் தடையில்லை என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.


தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பாய்ந்தோடிக் கடலில் கலக்கிறது. ஆற்றின் மொத்த நீளமான 432கிமீ தூரத்தில் 320கிமீ தமிழகத்திலும் 112கிமீ கர்நாடகத்திலும் பாய்கிறது.

இந்நிலையில் குடிநீர் தேவைக்கென கர்நாடக அரசு தமிழகத்தின் இசைவில்லாமலே எல்லையோரத்தில் தடுப்பணை கட்டும் பணிகளைத் தொடங்கியது. அதனை எதிர்த்துத் தமிழகஅரசு தொடுத்த வழக்கையே தற்போது உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே

50 அடி உயரத்தில் தடுப்பணை கட்டினால் தமிழகத்திற்கு முற்றிலுமாக நீர்வரத்து இருக்காது. காலப்போக்கில் ஆறு வறட்சியடைந்தால் மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் மக்கள் திண்டாடும் நிலை உருவாகும். நிலத்தடி நீர் வளமும் குன்றிப்போகும்.

அதாவது, அம்மாவட்டங்களில் நீராதாரமும் பிற வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும். 1892 நீர்பங்கீடு ஒப்பந்தத்தில், நதிப் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒத்திசைவு இல்லாமல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளிட்ட எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், கர்நாடகாவின் இத்திட்டத்துக்குத் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமலேயே ஒப்புதல் அளித்தது.

இது அப்பட்டமான தமிழர் விரோத நடவடிக்கையாகும். தற்போது உச்சநீதிமன்றமும் தமிழருக்கு விரோதமாகத் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்நிலையில், உடனடியாக இதனை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீட்டு நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் மீளாய்வு மனு தாக்கல் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கர்நாடக அரசுக்குச் சுற்றுசூழல் அமைச்சகம் அளித்துள்ள ஒருசார்பு ஒப்புதலைத் திரும்பப்பெற வேண்டுமென மைய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமா அறிவித்துள்ளார்.