தூத்துக்குடி போகாத ரஜினி இன்னும் என்னவெல்லாம் சொல்வாரோ..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தீவிரவாதிகளை அடையாளம் காட்டுவார் ரஜினி என்று சொல்லப்பட்ட நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டிருக்கிறார். என்னாச்சு என்று கேட்டால் வில்லங்கமான காரணம் சொல்கிறார்.


அதாவது, ரசிகர்கள் கூட்டம் அதிகளவு வந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம், எனவே கேள்வித்தாளை அனுப்பிவைத்தால், பதில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அடேங்கப்பா ரஜினி என்று வியக்கத்தான் வேண்டியிருக்கிறது.

இப்போது சில கேள்விகள் கேட்கவேண்டியிருக்கிறது. ரஜினிகாந்த் இதுவரை ஒரு விழாவிலும், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது இல்லையா? அனைத்து படங்களின் ஆடியோ ரிலீஸ் தொடங்கி அத்தனை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறார். அது, அவரது ரசிகர்களுக்குத் தெரியாதா?

ரஜினிகாந்த் எப்போது ஏர்போர்ட் வருகிறார் என்பதும் ரசிகர்களுக்குத் தெரிகிறது. அங்கே வந்து ரசிகர்களால் எப்போதாவது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதா...? 

சரி, இவற்றை எல்லாம் விட்டுத்தள்ளிவிடலாம். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் ஆசையில் இருக்கிறார். இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கினால் ஊர் ஊராக பிரசாரம் செய்ய வேண்டி இருக்கும். அப்போது நாடெங்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுமே, அதனை தவிர்க்க என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ..?

ஓட்டுப் போட போகும்போது, ரசிகர் கூட்டம் குவிந்தால் என்னதான் செய்வாரோ...? ரஜினி சினிமாவைவிட வெளியில் நன்றாகவே நடிக்கிறார் என்பதுதான் இன்றைய நிலவரம்.