டிகிரி முடித்திருந்தால் போதும்! ரூ.25 ஆயிரம் சம்பளம்! வேலைக்கு ஆள் எடுக்கும் எஸ்பிஐ!

பாரத ஸ்டேட் வங்கி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தனது வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைப் பிரிவுக்கு ஆள் எடுக்கும் தேர்வை தொடங்கவுள்ளது.


ஒரு மனுதாரர் ஒரு மாநிலம் சார்ந்த பணிக்குத் தான் விண்ணப்பிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதமும் இறுதித் தேர்வு வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 

குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் மனுதாரர் அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியில் நன்கு பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வுகள் அந்தந்த மாநில உள்ளூர் மொழியிலேயே நடத்தப்படும் என்றும், இறுதித் தேர்வி வெற்றி பெற்றாலும் பணியில் சேர்வதற்கு முன் உள்ளூர் மொழி சார்ந்த தேர்வு நடத்தப்படும் எனவும் அதில் வெற்றி பெறத் தவறினால் பணியில் சேர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்ளூர் மொழியில் 10 மற்றும்  12-ஆம் வகுப்பு படித்து தேறிய சான்றிதழ்களை காட்டினால் மொழித் தேர்வை எதிர்கொள்ள அவசியம் இல்லை 

பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமன்றி இறுதியாண்டில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆனால் அவர்களது படிப்பு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முடிவடையும் வகையில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பு 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தொடக்க அடிப்படை ஊதியம் 13 ஆயிரத்து 75 ரூபாய் என்றும் படிகள் அனைத்தையும் சேர்த்து 25 ஆயிரம் ரூபாய் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 3.