ஜெனிவா கூட்டத்துக்கு ஸ்டாலின் போகமாட்டார், என்னா பெட்?

எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தங்கள் கருத்துக்களை எடுத்துச்சொல்வது அரசியல்வாதிகளின் பணி. அப்படியொரு அரிய வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கிறது.


ஆம், ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 42வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 9ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கெனவே ஒரு முறை ஜெனிமா கூட்டத்துக்குப் போய் தன்னுடைய கருத்தை சொன்னவர்தான் ஸ்டாலின். ஆனால், இந்த முறை நிச்சயம் போகமாட்டார் என்ன பெட் என்று தி.மு.க.வினரே உறுதியாக சொல்கிறார்கள். அப்படி என்ன விவகாரம்..?

ஜெனிவா கூட்டத்துக்குப் போனால் காஷ்மீர் பிரச்னை பற்றி எழுப்பவேண்டிய சூழல் ஏற்படும். அது உள்நாட்டுப் பிரச்னை, அதனை எதற்காக ஜெனிவாவில் எழுப்பினீர்கள் என்று பா.ஜ.க. டென்ஷன் ஆகும். 

அதன்பிறகு தி.மு.க. எம்.பி.க்களை சி.பி.ஐ. தேடி வரும். தி.மு.க.வினர் மீது குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டு நடக்கும். இதன் உச்சகட்டமாக தி.மு.க. கட்சியை உடைக்கும் சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதனால், என்னாத்துக்கு ஜெனிவாவுக்குப் போகவேண்டும் என்று பின்வாங்கி விடுவார் என்று சொல்கிறார்கள். இன்விடேஷன் வரவில்லை என்று டென்ஷன் ஆகும் இந்த உலகத்தில், ஏன்டா இன்விடேஷன் கொடுத்தீங்க என்று டென்ஷன் ஆவது ஸ்டாலின் மட்டும்தான்.