ஜெயிச்சா ஸ்டாலின் முதல் அமைச்சர், உதயநிதி மேயர்! தோத்துட்டா அழகிரி கட்சிக்குத் தலைவர்!

ஆட்சியைத் தீர்மானிக்கும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்துமுடிந்திருக்கிறது. இன்னும் 4 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மற்ற எந்தக் கட்சிகளையும்விட, தி.மு.க.வில்தான் தேர்தல் முடிவுகள் பற்றி ஏகப்பட்ட ஹேஸ்யங்கள் உலவுகின்றன.


இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக் காலம் இருப்பதால், இந்த முறை ஆட்சியைப் பிடித்தே தீரவேண்டும் என்று தி.மு.க. உறுதியுடன் இருக்கிறது. ஏனென்றால் அடுத்து நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் ஆட்சியைப் பிடிப்பது இன்னமும் சிக்கலாகலாம். அதற்குள் ஆட்சியில் அமர்ந்து நல்லபெயர் வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார் ஸ்டாலின்.

அதனால்தான் அமைச்சரவை கனவில் மிதக்கும் தி.மு.க.வினர், ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதேபோன்று வெற்றிபெற்றவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்பட்டு ஜெயிக்க வைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இதுவெல்லாம் ஸ்டாலின் ஆட்களின் கனவு, அதேநேரம் அழகிரி ஆட்களுக்கும் கனவு இருக்கிறது. அவர்களுடைய ஆசை என்னவென்றால், தி.மு.க. இந்தத் தேர்தலில் மிக மோசமாக தோற்கவேண்டும் என்பதுதான். அப்படி தி.மு.க. தோற்றுவிட்டால், இதுவரை ஸ்டாலினுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் எதிர்த்துப் பேசுவார்கள்.

அப்படியொரு நிலைமை ஏற்பட்டதும் அழகிரியை தலைவராக ஏற்க வேண்டும் என்று முன்னிருத்தப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அழகிரி தலைவரானால்தான் கட்சி ஜெயிக்கும் என்று சொல்லப்பட்டு, ஸ்டாலினிடம் இருந்து பதவியை தட்டிப் பறிப்பாராம். இதற்கு பா.ஜ.க. உதவி செய்யும் என்று உறுதி அளித்திருக்கிறதாம். அதாவது மாவட்ட செயலாளர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, அழகிரி பக்கம் இழுத்துவரும் வேலையை பா.ஜ.க. செய்யுமாம்.

கேட்க நல்லாத்தான் இருக்கு... அழகிரி தலைவரானா, தயாநிதி அழகிரிக்கு என்ன பதவின்னு சொல்லுங்கப்பா....