மத்திய அரசினால், நல்லாட்சி மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் நன்றி தெரிவிக்கும் வேளையில், இதில் இருக்கும் உள்குத்துக்களை அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.
முதல் பரிசு வாங்கிய எடப்பாடியை போட்டுத் தாக்கும் ஸ்டாலின்! மோடியின் சூட்சுமம் இதுதானா?
குடிப்பதற்கு எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை, பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல சாலை வசதிகள் இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஊழல் அமைச்சர்கள் என்று, தமிழக மக்கள் அ.தி.மு.க.வின் பொல்லாத ஆட்சி நடக்கிறது.
ஆனால், மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் என்று மத்திய பா.ஜ.க அரசு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டிருப்பது, “கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா" என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.
முதலில் மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்தத் தர வரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையா? துறைகளின் கீழ் உள்ள அளவுகோல் குறித்த விவரங்களை அளித்தது யார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாத, ஒரு “மர்ம ஆய்வறிக்கை” அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
ஆனால் உண்மை என்ன? “மூன்றாண்டு கால எடப்பாடி திரு பழனிசாமியின் கேடுகெட்ட, மக்கள் விரோத, ஊழல் அரசுக்கு “நல்லாட்சி சாயம் பூசி” கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பா.ஜ.க. அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது.
ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரு துறைகளில் மட்டுமே “முதலிடத்தில் இருப்பதாக” உள்ள தர வரிசைப் பட்டியலில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? எந்தவித விளக்கமோ, விவரமோ இல்லை. ஆனால், அதிமுக அரசுக்கு அளித்துள்ள இந்த சான்றிதழால், மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தின் கேடு கெட்ட அ.தி.மு.க ஆட்சிக்கு ஜாமீன் கொடுக்கும் அமைப்பாக மாறியிருக்கிறது.
நீதி நிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில் முதலிடம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது. அடுத்து பொது உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வு வரம்பிற்குள் சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்றவை முக்கியமாக வருகின்றன. தமிழகம்தான் உள்ளாட்சித் தேர்தலே மூன்று வருடங்கள் நடத்தாத ஒரே மாநிலம் என்று மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதனால் மாநிலத்திற்கு வர வேண்டிய உள்ளாட்சி நிதியை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளது. சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றும் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத போது எப்படி இந்த துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது?
மோசமான அதிமுக ஆட்சியைத் தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது என்றால்- பா.ஜ.க. அரசுக்கும்- இங்குள்ள அதிமுக அரசுக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவு என்பதையும் தாண்டி- ஏன், கூட்டணி உறவுக்கும் அப்பாற்பட்ட நெருக்கமான ஒரு உறவாக, அ.தி.மு.க-., பா.ஜ.க. உறவு அமைந்திருக்கிறது என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தங்களுக்குப் பயன்படாத தமிழகம் எப்படியோ சீரழியட்டும், அந்த மக்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்ற வஞ்சக நோக்கில், அதிமுக அரசுக்கு நல்லாட்சி சான்றிதழை மத்திய பா.ஜ.க. அரசு செயற்கையாக அளித்திருக்கிறது. இதைத் தமிழக மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்! தரவரிசைப் பின்னணியைப் பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள அய்யப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.