உள்ளாட்சிக்கு அச்சமில்லையாம்..! நீதிமன்றத்துக்கும் ரெடி, தேர்தலுக்கும் ரெடி! ஸ்டாலின் அறிவிப்பு

இன்று, தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


அதில் உள்ளாட்சிக்கு ரெடி அதேநேரம் உச்ச நீதிமன்றத்துக்கும் போவோம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் “சரணாகதி” செய்து விட்டு - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக - உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணி வகுக்க வைத்து - மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருப்பதற்கு; மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

அரசியல் சட்டப் பிரிவு 9-ன்படி, 17.10.2016 மற்றும் 19.10.2016 அன்று நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

 “2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை முடிந்து விட்டது. 31.5.2019-க்குள் தேர்தலை நடத்துவோம்” என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் முன்பு 1.3.2019-ல் உறுதியளித்தது.

ஆனால், 18.11.2019 அன்று “டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்று உச்சநீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும்; “நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம்”, “9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இட ஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது”, “ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல்”, என்றெல்லாம் அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின. ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உச்சநீதிமன்றத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அணுகியது.

அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

எனினும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 6.12.2019 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட, வார்டு மறுவரையறை - பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட விதிமுறைப்படி செய்ய வேண்டும்; புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகள் எதையும் பின்பற்றாமல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில், நேற்று (7.12.2019), சட்டத்திற்குப் புறம்பாக, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றைச் சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாகச் செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது என்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல், தங்களுடைய குறைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி, வாய்ப்பூட்டு போடப்பட்டு, அல்லல்களுக்கு ஆளாகிவரும் தமிழக மக்கள், தி.மு.கழகத்தின் பக்கம் உறுதியாக நின்று பேராதரவினை நல்கிடுவார்கள். எனவே உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும்; “ மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே “ என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட தி.மு.கழகம் தயாராக இருக்கிறது என்று கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.