சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது கொண்டு வரும் என்கிற கேள்விக்கு நேற்றும் கூட மு க ஸ்டாலின் பதில் அளிக்கவில்லை.
சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் எப்போது? மு க ஸ்டாலின் தொடர்ந்து மௌனம்!
நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாள் சமயத்தில் தமிழகத்தில் திமுகதான் ஆட்சியில் இருக்கும் என்று பிரச்சாரம் செய்தார் மு க ஸ்டாலின். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை திமுக கொடுத்தது.
ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்கிற கேள்விக்கு திமுக தரப்பில் இருந்து உறுதியான பதில் எதுவும் வரவில்லை.
கடைசியாக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது கொண்டு வருவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆட்சிக் கவிழ்ப்பு குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்த்து திமுக தொண்டர்கள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மு க ஸ்டாலின் திமுகவின் தேர்தல் வெற்றி மற்றும் கலைஞர் குறித்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். மேலும் திமுக எம்பிக்கள் அனைவரும் மாதம்தோறும் தாங்கள் செய்யும் பணிகள் குறித்த அறிக்கையை தன்னிடம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் கடைசிவரை ஆட்சிக் கவிழ்ப்பு என்கிற வார்த்தையைக்கூட ஸ்டாலின் உச்சரிக்கவில்லை.
மேலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசவில்லை. இதனால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்கிற முடிவில் இருந்த ஸ்டாலின் பின் வாங்கி விட்டதாக திமுகவினரே கூறிச் சென்றனர்.
இதற்கு காரணம் சட்டப்பேரவையில் அதிமுக பெரும்பான்மையை பெற்றதுடன் ஆளும் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் யாரையும் திமுக தங்கள் வசம் இழுக்க முடியாததும் தான் என்கிறார்கள்.