தி.மு.க – காங்., தொகுதிப் பங்கீடு ! சோனியா முன்னிலையில் ஸ்டாலின் மருமகன் முடித்த டீல்!

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பின் போது தமிழகத்தில் அந்த கட்சிக்கான நாடாளுமன்ற தொகுதிகள் எத்தனை என்கிற டீலை ஸ்டாலின் மருமகன் சபரீசன் இறுதி செய்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக்கட்சிகளுடன் கூட்டணி என்பதை தி.மு.க இறுதி செய்துவிட்டது. இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி என்று பேசி அதற்கான டீலிங் கடந்த மாதமே முடிந்துவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் என்பதில் தி.மு.க உறுதியாக இருந்து வந்தது.



   ஆனால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்று அடம்பிடித்து வந்தது. இந்த நிலையில் தான் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திறக்க சோனியா காந்தி ஒப்புக் கொண்டார். இதற்கான அழைப்பிதழை கொடுக்க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். பெயருக்கு தான் அழைப்பிதழை கொடுக்க ஸ்டாலின் சென்றுள்ளாரே தவிர சந்திப்பின் மிக முக்கியமான நோக்கம் கூட்டணி தொகுதிப்பங்கீடு தான் என்கிறார்கள்.



   அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின் போது ஸ்டாலினுடன் அவரது மருமகன் சபரீசனும் சென்று இருந்தார். சொல்லப் போனால் அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கிய சோனியா காந்தியை கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தர ஒப்புக் கொள்ள வைத்ததே சபரீசன் தான். அந்த வகையில் அவருக்கு முக்கியத்தும் கிடைத்ததை தொடர்ந்து ஸ்டாலின் – சோனியா சந்திப்பின் போது சபரீசனும் உடன் இருந்தார்.

   அப்போது தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் வழங்குவதாகவும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் சபரீசன் கூற அதனை சோனியா ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் 11 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக கூறப்பட்ட நிலையில் சோனியாவுடன் பேசி 9 தொகுதிகளுக்கு சபரீசன் ஓ.கே சொல்ல வைத்துவிட்டார் என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



   ஏற்கனவே சோனியா காந்தியை சென்னைக்கு வரவழைத்தது, தற்போது கூட்டணி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தது என ஸ்டாலின் மருமகன் சபரீசன் கிட்டத்தட்ட நேரடி அரசியல் களத்திற்கு வர ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.