பேச்சுக்கு மட்டும்தான் ஸ்டாலின்… செயலுக்கு எடப்பாடியார்..! அரசியல் சடுகுடு ஆரம்பம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஸ்டாலின் இப்போதே, ’விடியலை நோக்கி... ஸ்டாலினின் குரல்’ என்கிற தலைப்பில் பிரசாரத்தையே தொடங்கிவிட்டார். அவர் மட்டுமின்றி உதயநிதி, கனிமொழி, நேரு, துரைமுருகன் என்று முக்கியப் புள்ளிகள் அத்தனை பேரும் ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.


ஆனால், இன்னமும் அ.தி.மு.க. மக்கள் நலப் பணிகளில் மட்டுமே தீவிரம் காட்டிவருகிறது. அதேநேரம், அமைதியாக தேர்தல் யுக்திகள் செய்யப்பட்டு வருகின்றன. 

முந்திரிக்கொட்டைத் தனமாக திமுக முன்கூட்டியே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதில் அந்த கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். முழுக்க கைக்காசை செலவழிக்க வேண்டியிருப்பதால் தலைமை மீது அவர்கள் கடும் எரிச்சல் அடைந்துள்ளனர். தலைமையிடம் இருந்து பத்து பைசாகூட வரவில்லை என்ற கடுப்பும், கோபமும் அவர்களிடம் உள்ளது.

தி.மு.க. பிரசாரம் செய்துவரும் வேளையில், அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வில் பிஸியாக இருக்கிறது. ஆம், இந்தமுறை வேட்பாளர் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கெட்ட பெயர் வாங்காத இளம் தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிமுக தேர்தல் ஆலோசனைக் குழுவும் சர்வே அடிப்படையில் தனியாக பட்டியல் ஒன்றை தயார் செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக உளவுத்துறையும் தனது பங்கிற்கு எந்த தொகுதியில் யாரை நிறுத்தலாம் என்பது பற்றிய ரிப்போர்ட்டை ரெடி பண்ணி வருகிறது.

இந்த பட்டியல்களின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு இருக்கும். அனைத்து வகையிலும் தகுதி வாய்ந்தவர்களையே நிறுத்த வேண்டும் என்பதில் முதல்வர் ரொம்பவே கறாராக இருக்கிறார். சிபாரிசுகளை ஓரம்கட்டவும் அவர் முடிவு செய்திருக்கிறார். இதனால் இப்போதைய சிட்டிங் எம்.எல்.ஏக்களில் பலருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். ஒருசில அமைச்சர்களுக்கும் இதே நிலைதான்.

கூட்டணி எப்படி அமைந்தாலும் 180 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதிலும் எடப்பாடி உறுதியோடு இருக்கிறார். இதை அறியும் அரசியல் ஆய்வாளர்கள், ‘தி.மு.க. இப்படி பேசிக்கிட்டே இருக்கவேண்டியதுதான், அ.தி.மு.க. அமைதியாக செயல்படுத்தி அள்ளிக்கொள்ளப் போகிறது’ என்கிறார்கள்.

சரிதானே.