வைகோவுக்கு ஸ்டாலின் கொடுத்த புதிய அல்வா ! அதிர்ச்சியில் ம.தி.மு.க!

சென்னையில் ம.தி.மு.க ஒருங்கிணைத்த ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஸ்டாலின் மீண்டும் அல்வா கொடுத்துள்ளார்.


தமிழர்கள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கண்டித்து அவர் வசிக்கும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக வைகோ அறிவித்தார். அனைத்து கட்சிகள் ஆதரவு மற்றும் தமிழ் அமைப்புகளின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த போராட்டத்தை ம.தி.மு.க ஒருங்கிணைக்கும் என்றும் வைகோ அறிவித்திருந்தார்.

   மிகப்பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி ஆளுநர் மாளிகை முன்பு முற்றுகை போராட்டத்தை நடத்தி கிண்டியை திக்குமுக்காட வைக்க வேண்டும் என்பது தான் வைகோவின் திட்டமாக இருந்தது. இதற்காகத்தான் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க., வி.சி.க மட்டும் அல்லாமல் பல்வேறு கட்சித்தலைவர்களுக்கும் வைகோ அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. வழக்கம் போல் தனது கட்சியின் சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவனை அனுப்பி வைத்திருந்தார் ஸ்டாலின்.

   மேலும் சென்னையில் உள்ள தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்களும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தி.மு.கவினர் பெரிய அளவில் கூட்டத்தில் தென்படவில்லை. மாவட்டச் செயலாளர்களுடன் வந்திருந்த 50 முதல் 60 பேர் வரை மட்டும் தான் தி.மு.கவினராக இருந்தனர். மற்றபடி ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், மே 17 இயக்கத்தினரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

   கூட்டம் பெரிய அளவில் கூடாத நிலையில் வந்திருந்தவர்களும் அருகே நிழல் உள்ள இடமாகவும், கடைகளுக்கும் சென்று காற்று வாங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த வைகோ, போராட்டத்திற்கு வந்தவர்கள் மேடைக்கு முன்பு வர வேண்டும் என்றும், நிழலை தேடிப்போய் நிற்க கூடாது என்றும் மிரட்டல் விடுத்துக் கொண்டே இருந்தார். மேலும் கடைகளில் நின்று கொண்டிருந்த ம.தி.மு.கவினரையும் உடனடியாக ஆர்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வரச் சொன்னார்.

   இதனால் கடுப்பான சில தொண்டர்கள், வைகோ மட்டும் மேடையில் நிழலில் சேர் போட்டு அமர்ந்து கொள்வார், நாம் மட்டும் வெயிலில் கால் கடுக்க நிற்க வேண்டுமா என்று முனகிக் கொண்டிருந்தனர். காலையில் தொடங்கிய முற்றுகை போராட்டம் பிற்பகல் வரை நீடித்த நிலையிலும் பெரிய அளவில் கூட்டம் வரவில்லை. மேடையில் பேசிய வைகோ 25 ஆயிரம் பேர் வந்திருப்பதாக கூறினார். ஆனால் எண்ணிப் பார்த்தால் 500 பேர் கூட தேறமாட்டார்கள்.   இதற்கு காரணம் மு.க.ஸ்டாலின் தான் என்று வைகோ முனகியபடி சென்றதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் ஆர்பாட்டத்திற்கு வந்திருந்தால் நிச்சயம் அவரது கட்சியினர் திரண்டிருப்பர். ஆர்பாட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கும். ஆனால் தான் நேரில் சென்று அழைத்தும் முற்றுகை போராட்டத்திற்கு ஸ்டாலின் வராதது வைகோவுக்கு சற்று மனக்கஷ்டம் தான் என்கிறார்கள்.

   ஆனால் ஸ்டாலினோ எந்த காரணம் கொண்டும் வைகோவை முன்னிலைப்படுத்துவது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் அவர் ஒருங்கிணைத்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு கொடுத்துக் கொண்டு ஸ்டாலின் ஒதுங்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.  கூட்டணி விஷயத்திலும் கூட தற்போது வரை ம.தி.மு.கவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்காமல் ஸ்டாலின் அல்வா கொடுத்துக் கொண்டே தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.