10 நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஸ்டாலின்..! பிறகு அவர் செய்த செயல்!

"பத்திரிகைச் செய்தி - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு உதவினார்"


இன்று (03-04-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 'கொரோனா ஊரடங்கினால்' பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். அதன் விவரம் பின்வருமாறு:

6வது மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த ஏழு நாட்களாகக் கழகத் தலைவர் அவர்கள் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய காலைச் சிற்றுண்டியை கழகத் தலைவர் அவர்கள் நேரடியாக வழங்கியதோடு, கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார். அதோடு, அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கினார்.

பின்னர், அருகில் இருக்கும் காய்கறி அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், காய்கறிகளின் வரத்து மற்றும் விலையேற்றம் குறித்தும் விசாரித்தறிந்தார்.

ஊரடங்கினால் அவதிக்குள்ளாகியிருக்கும் வெளி மாநில மக்களுக்கு, உணவு மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியதோடு, அவர்களுக்குத் தேவையான ஆடைகள், போர்வைகள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சோப்பு, பற்பசை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். அதோடு, மருத்துவர் குழுவினைக் கொண்டு அவர்களுக்கென 'மருத்துவ முகாம்' நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 500 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 500 ரூபாய் உதவித்தொகை, அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான 5 கிலோ அரிசி உள்ளிட்ட 'ரேஷன் பொருட்கள்', ஆகியவற்றை கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் 'சமூக இடைவெளி' முறையைப் பின்பற்றி வழங்கினார். 

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரியிருந்த, ஜி.கே.எம் காலனி 30வது தெருவில் அமைந்துள்ள சிப் மெமோரியல் டிரஸ்ட்டைப் (SIP Memorial Trust) பார்வையிட்ட கழகத் தலைவர் அவர்கள், அவர்கள் கோரியிருந்த உதவித்தொகையை வழங்கியதோடு, அங்கு உள்ள எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

'அமுதம் பல்பொருள் சிறப்பு அங்காடியை' பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் கூட்டமாகக் குவிந்திருந்த மக்களிடம் 'சமூக இடைவெளியின்' அவசியத்தை எடுத்துரைத்து, அங்குக் கூடியிருந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் முகக்கவசங்களை வழங்கினார். அதோடு, அந்த நியாய விலைக் கடையின் ஊழியருக்கும் முகக்கவசம், சானிடைசர் (கை கழுவும் திரவம்) ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், பெரவள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்ற கழகத் தலைவர் அவர்கள், முகக்கவசங்களைத் தொடர்ந்து மாற்ற வேண்டிய அவசியமிருப்பதால், அங்கிருந்த காவல்துறையினருக்கு அடிக்கடி மாற்றுவதற்குத் தேவையான முகக்கவசங்கள் மற்றும் வெளியிடங்களுக்குச் சென்று வரும் காவல்துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப சானிடைசர்களை வழங்கினார்.

ஆய்வுப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், அன்றாடத் தேவைகளுக்காக 'மளிகைக் கடைக்கு' வந்த பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைக் கண்டு, 'சமூக இடைவெளியின்' அவசியத்தை வலியுறுத்தி, அவர்கள் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கினார்.

அதோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு, அவர்களது சேவையைப் பாராட்டி நன்றி தெரிவித்த அவர், அவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் ஆகியவற்றை வழங்கினார்.