தண்ணீருக்கு அலையும் தமிழகம்! சிங்கப்பூரில் ஸ்டாலின் ஜாலி! சேலத்தில் எடப்பாடி ஜோலி!

தமிழகத்தில் இன்று பிளாஸ்டிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு அலையவில்லை என்றால், அவன் தமிழனே இல்லை என்ற அளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைக்கு மேல் போய்விட்டது.


இதனை தீர்க்கவேண்டிய தலைவர்கள் இன்றுவரை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். தமிழக முதல்வர் எடப்பாடிக்கு சேலம் மட்டும் நன்றாக இருந்தால் போதும், அதனால் அங்கே பாலம் கட்டுவதற்கும் புது வீடு பால் காய்ச்சுவதற்கும்தான் ஆர்வம் காட்டுகிறாரே, தவிர சென்னை பற்றியோ தண்ணீர் பற்றியோ எந்த கவலையும் இல்லை. மழை இல்லைன்னா என்னா செய்றது என்ற தெனாவெட்டு பேச்சு மட்டும்தான் இருக்கிறது.

ஆளும் கட்சி சரியில்லைன்னா தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க் கட்சித்தலைவர் அதைவிட பிரமாதம். சென்னை வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் போய்விட்டார். மழை வந்ததும் வர்றேன் என்று கிளம்பிவிட்டார்.  இவனுங்க ரெண்டு பேரும் சரியில்ல, நாந்தான் தமிழகம் என்று சொல்லிவந்த தினகரன், இதுவரை தோல்வியில் இருந்து வெளியே முகம் காட்ட வெட்கப்பட்டு உள்ளேயே கிடக்கிறார். அவருக்கு மக்கள் தண்ணீர் பிரச்னையால் கவலைப்படுவது தெரியுமோ என்னமோ?

ராமதாஸ் பற்றி சொல்லவே வேண்டாம், தோட்டத்தைவிட்டு வெளியே எட்டிப் பார்க்க மாட்டார். அவ்வப்போது அறிக்கையை தட்டிவிட்டால் போதும் என்ற நல்ல மனசு அவருக்கு. அய்யா விஜயகாந்த் இப்போது எந்த நிலையில் இருக்கிறாரோ, அவருக்கே தெரியாது அது. இதுதவிர சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது ரொம்பவும் ஹேப்பி, அதான் காவிரியை கோதாவரியில் இணைக்கப்போறாங்களே. அதுக்குள்ள ஏன் அவசரப்படுறீங்க என்று கேட்பார். கமல்ஹாசனோ, பிக்பாஸில் பிஸி.

செயற்கை மழை, ரயிலில் தண்ணீர், கடல் குடிநீர் என்று எந்த கவலையும் இல்லாமல் அவரவர் வேலையை பார்த்துவருகிறார்கள் நம் அரசியல்வாதிகள். இந்த நாடும், மக்களும் நாசமாகப் போகட்டும் என்பதுதான் அவர்கள் எண்ணம்…