அண்ணா நூலகத்தில் ஸ்டாலின் உறுப்பினராகி விட்டார்! இனியாவது நல்லா படிச்சு, தப்பு இல்லாம பேசட்டும்!

இன்று திடீரென்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்த ஸ்டாலின், தன்னை உறுப்பினராக பதிவு செய்திருக்கிறார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். ‘‘அண்ணா நூற்றாண்டு நூலகம், 122 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கட்டப்பட்டு, அண்ணா அவர்களின் 102வது பிறந்த நாளில் 15.9.2010 அன்று தலைவர் கலைஞர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, 2011ல் இருந்து அந்த நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது. பராமரிக்காமல் விட்டால் கூட பரவாயில்லை, அதைச் சீரழிக்கக் கூடிய வகையில் பல செயல்களில் இந்த அரசு ஈடுபட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக, நூலகத்தை மாற்றி குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப் போகிறோம் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து, இங்கு உள்ள அரங்குகளை திருமணங்களுக்கு வாடகை விடுகிற செயலில் ஈடுபட்டார்கள். எனவே, இவற்றை எல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி, தி.மு.க. வின் சார்பில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி ஒரு மனுவாக ஆளுநரிடத்தில் நாங்கள் வழங்கினோம்.

அதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்தோம். அவ்வழக்கின் மூலம், அரசு எடுத்த, நூலக விரோத நடவடிக்கைகள் எல்லாம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து, இப்பொழுது இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசு, நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு ஒரு அரசாணை பிறப்பித்திருக்கிறது..

நூலகத்திற்கு புதிதாக உறுப்பினர்கள்- வாசகர்கள் சேர்த்திட வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அந்தச் செய்தி நேற்றைக்கு வந்தது. அதனை அடுத்து, இன்று நான் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்று, அந்நூலகத்தைப் பார்வையிட்டேன்.

அப்போது அங்கு மக்கள், என்னிடம் பல்வேறு கோரிக்கைகள், குறைபாடுகளை எடுத்துரைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் கேட்ட பின்னர், நூலகத்தில் என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டேன். இனி மேலாவது இந்த நூலகத்தைப் பராமரிப்பதை அரசியல் ஆக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பல்வேறு உயர்ந்த படிப்புகளைப் பயில்பவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமைந்திருக்கிறது. உலகத்திலே மிகச் சிறந்த நூலகமாக எல்லோராலும் போற்றப்படும் வண்ணம் இந்த நூலகம் விளங்குகிறது.

எனவே, இனியாவது இந்த அரசு, அண்ணா நூலகத்தைப் பராமரிப்பதில் அரசியல் செய்யாமல், நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

உறுப்பினர் ஆவது முக்கியமில்லை மிஸ்டர் ஸ்டாலின். ஏதாவது புத்தகம் படிச்சு நல்லா பேசக் கத்துக்கோங்க.