தமிழ் நாட்டில் தமிழுக்கு இடம் இல்லையா..? ஸ்டாலின் ஆவேசம்!

தஞ்சைப் பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழில் மட்டும்தான் நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக அறிவித்து இருக்கிறார்.


சமஸ்கிருதத்தில் நடத்துவது ஏற்க முடியாது என்று பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நேரத்தில், ஸ்டாலினும் களம் இறங்கியிருக்கிறார். பிப்ரவரி 5ஆம் நாள் நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு விழாவினைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழு நடத்துகிற மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவனத்திற்குமானது.

திராவிடக் கட்டடக்கலை என உலக வரலாற்று ஆய்வாளர்களால் போற்றப்படும் தமிழரின் பண்பாட்டுச் சின்னமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பேரதியசமாக விளங்குகிறது, தஞ்சைப் பெருவுடையார் கோவில். அந்தப் பெருங்கோவிலைக் கட்டிய மாமன்னன் இராராசசோழன் சிலைக்கே கோவில் வளாகத்தில் இடம் கிடைக்கவில்லை என்பது, கடந்த கால வரலாறு. அதனால்தான், கோவிலருகிலேயே அதனைக் கட்டிய மாமன்னனின் சிலையை மக்கள் காணும் வண்ணம் நிறுவி, பூங்காவையும் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் !

வரலாறு நெடுகிலும் தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழர் பண்பாட்டின் வழிபாட்டுமுறைகள் சிதைக்கப்பட்டு, பிற பண்பாடுகளின் ஆதிக்கம் நுழைந்திருப்பதை உணர முடியும். அதை மாற்றி, தமிழ் வழிபாட்டு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் தஞ்சைப் பெரிய கோவில் உரிமை மீட்புக்குழு, தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது.

கோவில்களில் தமிழ் வழிபாட்டையும் சமூக நீதியையும் நிலைநாட்டுவது என்பது தொடர்ச்சியான பண்பாட்டுப் போராட்டமாகும். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தொன்மைமிக்க தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களான பல கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

"கும்பாபிஷேகம்" என்ற வடசொல்லை நீக்கி, "குடமுழுக்கு' என்ற தமிழ்ச் சொல்லைப் பரவலாக்கியதும் கழக அரசுதான். தமிழில் அர்ச்சனை என்பதில் தொடங்கி, அனைத்து சமுதாயத் தமிழர்களும் அர்ச்சகர்களாவதற்கான சட்டம் வரை திருக்கோவில்களில் தமிழர் வழிபாட்டு முறையை நிலைநாட்டுவதில் தலைவர் கலைஞர் அவர்களின் அரசு உறுதியான முயற்சிகளை மேற்கொண்டதையும், அந்த முயற்சிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் தி.மு.க அரசு நடத்திய சட்டப் போராட்டங்களையும் நாடறியும் என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.