எடப்பாடி பழனிசாமிக்கு அதிகார நோய்! ஸ்டாலின் ஆவேசம்.

தமிழகத்தில் கொரோனா தோல்வியை திசை திருப்பிடும் நோக்கில், கதை கதையாக அளந்துவிடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஸ்டாலின் ஆவேசமாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கிறோம் என்றால், தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்குத் தொற்று ஏற்பட்டது எப்படி? தினமும் 500 முதல் 1000-த்திற்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதும் - நேற்றைய தினம் மட்டும் 1149 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதும் இந்தத் தமிழ்நாட்டில்தானே?

தினமும் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே? 'மக்களைப் பாதுகாக்கிறோம்' என்று முதலமைச்சர் சொல்வது உண்மைக்கு மாறானது அல்லவா? அவருக்கே அது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இல்லையா?

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் இன்னமும் சிகிச்சை நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், ஏதோ இந்தியாவிலேயே இது இமாலயச் சாதனை என்பதைப் போல முதலமைச்சர் சொல்லிக் கொள்கிறார். 'நம்மை விட பா.ஜ.க. ஆளும் குஜராத் நிலைமை படுமோசம்' என்று வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!

அப்படி பெருமை கொள்ளவும் அவரால் முடியாது; ‘குஜராத் முன்னாள் முதலமைச்சர்’ கோபம் கொண்டாலும் கொள்ளுவார். 'உயிரிழப்புகள் குறைவு' என்று முதலமைச்சர் தனக்குத்தானே பெருமை பாராட்டிக் கொள்வது ஈவு இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு! 173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல், இந்த எண்ணிக்கை குறைவாகத் தெரியுமானால், அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாகத் தாக்கியிருக்கிறது என்று பொருள். 

“ஒரு லட்சம் மனுக்கள் தரவில்லை, 98,752 மனுதான் இருந்தன என்கிறார் ‘300 கோடி ரூபாய் ஊழல் மருத்துவமனை புகழ்’ அமைச்சர் ஒருவர். 'தமிழ்நாட்டில் பசி, பட்டினியே இல்லை' என்று முதலமைச்சர் சொல்கிறார். இத்தனை ஆயிரம் பேர் உணவுத் தேவைக்காக ஏன் மனுக் கொடுக்கிறார்கள்? எந்த இலட்சணத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்பது இதன் மூலமாக விளங்கவில்லையா?

29.5.2020 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான காணொலி ஆலோசனையில் “9.14 லட்சம் பிசிஆர் ஆய்வு உபகரணங்கள் வரப்பெற்றதாகவும்” அதில் “1.76 லட்சம் கையிருப்பு இருப்பதாகவும்” முதலமைச்சர் கூறியிருந்தார். அன்றைய கணக்குப்படி பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்ட பிசிஆர் ஆய்வு உபகரணங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550 தான்.

மீதி கையிருப்பு இருக்க வேண்டிய உபகரணங்கள் 4 லட்சத்து 47 ஆயிரத்து 450 ஆகும். ஆனால் முதல்வரின் கூற்றுப்படி 1.76 லட்சம் ஆய்வு உபகரணங்கள்தான் கையிருப்பு என்றால் மீதியுள்ள 2 லட்சத்து 71 ஆயிரத்து 450 உபகரணங்கள் எங்கே?

இதில் கையிருப்பில் உள்ள உபகரணங்களின் எண்ணிக்கை தவறா? அல்லது பரிசோதனை செய்ததாகக் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை தவறா? 

ஐந்தாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் வாங்கியுள்ள வென்டிலேட்டர்கள் வெறும் 560 தான். “ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது” என்று கூறிய அரசுக்கு, வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்?

ஆகவே, இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்குக் காலத்தை, “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்” விளம்பரத்திற்காக வீணடிக்காமல்; இந்த ஜூன் மாதத்தையாவது, உண்மையான மக்கள் விசுவாசத்துடன், முறையாகப் பயன்படுத்தி கொரோனாவைக் கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.