ஒண்டிவீரனுக்கு ஸ்டாலின் மரியாதை! என்னப்பா திடீர் ஞாபகம்?

இத்தனை ஆண்டு கால அரசியலில் முதன்முறையாக இன்றுதான், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் வந்து ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது.


இரண்டாயிரம் பேர் கொண்ட பெரும்படையுடன் வந்த ஆங்கிலேயே தளபதி கர்னல் ஹெரானை எதிர்த்து போரிட்டு வென்றவரும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டவர்களுள் ஒருவருமான மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 248வது நினைவு நாளான இன்று அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்!

சாதிபேதமின்றி வாழ்ந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டன. மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை உடனடியாக ஏற்று, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரில் 63.38 சென்ட் நிலம் ஒதுக்கினார். மணிமண்டபம் கட்டுவதற்காகவும், ஒண்டிவீரனின் திருவுருவச் சிலை அமைக்கவும் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்தார்.

பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 18.1.2011 அன்று செய்தித்துறை அமைச்சராக இருந்த மறைந்த பரிதி இளம் வழுதி அவர்கள் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

"அடித்தட்டு மக்களுக்கு ஒரு விடிவு காலத்தை உருவாக்கிட வேண்டும்" என்று தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் கலைஞர் அவர்கள், அருந்ததியினருக்கு கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி வரலாற்று சிறப்பு மிக்க அமைச்சரவை தீர்மானத்தை 27.11.2008 அன்று நிறைவேற்றி - அரசு ஆணை வெளியிட்டார்.

இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி பெறும் மாணவ மாணவியருக்கு உதவிடும் வகையில் "பெண் சிங்கம்" திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதற்காக கிடைத்த 50 லட்சம் ரூபாயுடன், தனது சொந்த நிதி 11 லட்சத்து 5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் 61 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை பொது நிவாரண நிதிக்கு வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

மேலும், அருந்ததியர் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபடும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்று கூறியிருக்கிறார்.

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான். வேறு என்னத்தைச் சொல்றது?