கைகட்டி, வாய்பொத்திக் கிடக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; கொந்தளிக்கும் ஸ்டாலின்!

இன்று, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் கடுமையாக உரை நிகழ்த்தினார்.


அவர் பேசியதன் சுருக்கம் இதோ.மத்தியில் ஓர் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதனை பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி என்று சொல்கிறோம். ஆனால் அது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அல்ல; உண்மையில் அது மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

அவசர அவசரமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்கள். குடியுரிமை சட்டம் என்றாலே அதன் உண்மையான பொருள் வெளிப்படையாக தெரியும். குடிகளுக்கு உரிமை வழங்கும் சட்டம் என்று அதற்கு பொருள். குடியுரிமைச் சட்டம் என்று பெயர் வைத்துக்கொண்டு குடிகளின் உரிமையை இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி பறித்துக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் இது குடியுரிமைச் சட்டமா? அல்லது குழிபறிக்கும் சட்டமா? என்று நான் இந்த கூட்டத்தின் மூலமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். குடிமக்கள் என்றால் இஸ்லாமியர்களும், ஈழத்தமிழ் மக்களும் குடிமக்கள் இல்லையா? எதற்காக இந்த ஓரவஞ்சனை?

பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக மக்கள் விரோத - ஜனநாயக விரோத - சர்வாதிகார சட்டங்களை வரிசையாக அரங்கேற்றுவீர்கள் என்றால், அதைப் பார்த்துக் கொண்டு கைகட்டி, வாய்பொத்தி இருக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; இது தந்தை பெரியாரின் கூட்டம்! அறிஞர் அண்ணாவின் கூட்டம்! தலைவர் கலைஞரின் கூட்டம்!

 மத்திய பா.ஜ.க. அரசு கவனம் செலுத்த வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் எத்தனையோ இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவதில்லை. திடீரென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறது.

இந்தச் சட்டம், மக்கள் விரோத சட்டம் என்பதால்தான் நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம். மாநிலங்களவையில் எதிர்த்து பேசி உள்ளோம். எதிர்த்து ஓட்டு போட்டுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

நான் எளிமையான 2 கேள்விகளை மட்டும் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து பிறமதத்தினர் வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று சொல்கிறீர்களே? இஸ்லாமியர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்? இது என்னுடைய முதல் கேள்வி.

இரண்டாவது கேள்வி, அண்டை நாடுகளில் இருந்து வருவோரது நன்மைக்காக சட்டம் கொண்டு வந்ததாக சொல்கிறீர்களே, இலங்கை அண்டை நாடு இல்லையா? அங்குள்ள ஈழத்தமிழர்களை மட்டும் புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு மத்திய அரசாங்கத்தால் பதில் சொல்ல முடிந்ததா? இதுவரை பதில் சொன்னார்களா? அனைவருக்கும் குடியுரிமை என்றால், நான் அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன், ஒருபோதும் தி.மு.க. அதனை எதிர்க்காது. மனப்பூர்வமாக ஆதரிப்போம்.

மிஷன், கரப்ஷன், கலக்ஷென் என விமர்சித்து வந்தோம். அதை தொடர்ந்து கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லிக் கோண்டிருந்தோம். ஆனால் தற்போது சொல்கிறேன். ‘தமிழின துரோக ஆட்சியாக எடப்பாடி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேடைகளிலும், ஊடகங்களிலும் வக்கனையாக பேசும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடியுரிமை சட்டம் பற்றி வாயைத் திறக்காததற்கு என்ன காரணம்? தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு தமிழக முதலமைச்சர் என்று சொல்லிகொள்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை அருகதை இருக்கிறதா? 

பா.ஜ.க. அரசு காலால் இட்ட பணிகளை தலையால் செய்யும் அடிமை ஆட்சி இந்த பழனிசாமி ஆட்சி. ஆதலால் தமிழகம் அதலபாதாளத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார் ஸ்டாலின்.