மீண்டும் அத்திவரதரை பூமியில் புதைத்தால் ஆபத்து! பீதி கிளப்பும் ஜீயர்!

இறைவனிடம் கண்ணீர்மல்க பக்தர்கள் தரிசிப்பதுபோய், தன்னை புதைக்கவேண்டாம் என அத்திவரதரே கண்ணீர்மல்க பக்தர்கள் கனவில் கேட்டுக்கொண்டது உண்மையா?


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 48 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் காட்சியளித்துக்கொண்டிருக்கிறார் அத்திவரதர். குளத்தில் புதைக்கப்பட்டிருந்த அத்திவரதர் எழுப்பப்பட்டு காட்சியளிக்கும்போது ஏதோ பத்தோடு பதினொன்றாக பக்தர்கள் வந்து போவார்கள். அந்தக் காலத்தில் போல் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கத் தேவையில்லை என்று கடந்துபோனவர்களின் எண்ணங்களில் இடி ! 

ஆரம்பத்தில் தினமும் 10 ஆயிரம் 20 ஆயிரம் வந்த பக்தர்கள் தற்போது 2 லட்சம் பேர் வரை சராசரியாக தரிசனம் செய்துவிட்டு செல்லும் அளவுக்கு அத்திவரதர் புகழ்பெற்றுள்ளார். அதற்கு மேலும் ஒரு காரணம் இன்றைய நவீன ஊடகங்களும், சமூகவலைதளங்களும், பத்திரிகைகளும்தான்.

48 வருடங்களுக்குப் பிறகு காட்சியளித்த அத்திவரதரை ஆகஸ்ட் 17ம் தேதி மீண்டும் மண்ணில் புதைத்துவிடுவார்கள். நம்மால் அடுத்தமுறை பார்க்கவே முடியாது என்ற ஆதங்கத்தில் பக்தர்களின் வருகைக்கு அளவே கிடையாது.

குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து நெரிசல், பக்தர்கள் நெரிசல் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் அத்திவரதரை நாள்தோறும் மக்கள் தரிசித்துக்கொண்டுதான் வருகிறார்கள்.

இந்நிலையில் அத்திவரதர் தன் கனவில் தோன்றி தன்னை மீண்டும் புதைக்கவேண்டாம் என்று அழுதுகொண்டே கேட்டுக்கொண்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள் புதிதாக ஒரு தகவலை தெரிவித்து ஆன்மிகவாதிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அந்தக் காலத்தில் அத்திவரதர் உள்ளிட்ட விக்கிரகங்களை பயத்தால் புதைத்தும் மறைத்தும் வைத்தனர். தற்போதைய காலத்தில் அப்படி புதைக்கவேண்டிய அவசியமில்லை என பல்வேறு மடாதிபதிகளும் தங்கள் கருத்தை தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளனர். இது குறித்து முதலமைச்சரிடம் மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அத்திவரதரை நிரந்தரமாக கோயிலில் வைப்பதன் மூலம் திருப்பதி போலவே காஞ்சிபுரமும் பக்தர்கள் எண்ணிக்கை வருகை அதிகரிக்கும் என்றும் அங்குள்ள மக்கள், வணிகர்களின் பொருளாதாரம், வாழ்க்கைத் தரமும் உயரம் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.