தீவிரவாதியின் நெஞ்சை பிடித்து நிறுத்திய வீரத் தமிழன்! இலங்கையில் 600 பேரை காப்பாற்றியவருக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கை தேவாலயம் ஒன்றின் வாசலில் தற்கொலைப் படைத் தீவிரவாதியை தடுத்து நிறுத்தியதன் மூலம் 600க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றியவர் இறப்புக்குப் பின் மக்களின் போற்றுதலுக்குரியவராகியிருக்கிறார்.


இலங்கையில் 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தபட்ட 3 தேவாலயங்களில் இலங்கையின் பட்டிகலா என்ற நகரில் உள்ள இவாஞ்சலிக்கல் தேவாலயமும் ஒன்று.

ஈஸ்டரை முன்னிட்டு இங்கு நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்க நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில் தன்னார்வத் தொண்டராக செயல்பட்ட ரமேஷ் ராஜு என்பவர் தேவாலய வாயிலில் நின்று கூட்டத்தினரை ஒழுங்கு படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார். அப்போது முதுகில் பையுடன் வந்த மர்ம மனிதனைப் பார்த்து  அவருக்கு சந்தேகம் ஏற்பட அந்தப் பையை வெளியில் வைத்து விட்டுச் செல்லுமாறு அந்த நபரிடம் வாக்குவாததத்தில் ஈடுபட்டார்.

ஆனால் அந்த நபர் மறுத்த நிலையில் வாக்குவாதம் நீண்டது. இந்நிலையில் அந்த நபரின் பையில் இருந்த குண்டு வெடித்ததில் தேவாலய வாயிலுக்கு வெளியில் நின்ற ரமேஷ் ராஜு மற்றும் 14 குழந்தைகள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்தனர். ஆனால் தீவிரவாதியை தேவாலயத்துக்குள் செல்லவிடாமல் ரமேஷ் ராஜு தடுத்து விட்டதால் உள்ளே இருந்த 600க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்தனர். 

இந்நிலையில் குண்டு வெடித்து ஒரு வாரத்துக்குப் பிறகு ஊர் மக்கள் அனைவரும் ரமேஷ் ராஜுவின் வீட்டுக்கு வந்து தங்கள் நன்றி கலந்த அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த ரமேஷ் ராஜுவின் தந்தை குண்டுவெடிப்பில் தேவாலய வாசலுக்கு வெளியில் நின்ற தனது மகள், மருமகன், மற்றும் 20 மாத பேரக்குழந்தை ஆகியோரும் உயிரிழந்துவிட்டாலும் தேவாலயத்துக்குள் உள்ளிருந்த ஏராளமான குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை எண்ணிப் பெருமைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

40 வயதாகும் ரமேஷ் ராஜுவின் மனைவி ஆசிரியையாக உள்ளார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.