எனது சடலம் ஆற்றுப் பாலத்துக்கு கீழ் கிடக்கிறது! தந்தைக்கு வாட்ஸ்ஆப் செய்துவிட்டு மகன் எடுத்த பகீர் முடிவு!

டெல்லியில் தனது உடல் ஆற்றுப் பாலத்துக்கு கீழ் கிடப்பதாக இளைஞனின் பெற்றொருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் வந்த நிலையில் அந்த நபர் மர்மமான முறையில் மரணம் அடைந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷ் கண்டேல்வால் என்ற 26 வயது இளைஞன் கடந்த மாதம் 30 ஆம் தேதி 6 நண்பர்களுடன் தனது நண்பனின் மனைவியுடைய பிறந்த நாள் விழாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜூலை 1-ஆம் தேதி ஹர்ஷின் வாட்ஸ் அப்பில் இருந்து அவரது பெற்றோருக்கும் நண்பர்களுக்கு வந்த தகவலில் தான் சாகப் போவதாகவும் தனது உடல் யமுனை ஆற்றுப்பாலத்துக்கு கீழ் கிடக்கும் என்றும் பதிவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து பெற்றோர் அலறியடித்து யமுனை ஆற்றுப் பாலத்துக்கு கீழ் சென்று பார்த்த போது ஹர்ஷின் உடைகளும் உடைமைகளும் கிடைத்தனவே தவிர உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் குப்பை பொறுக்குபவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில் பாலத்துக்கு கீழ் குப்பைகளுக்கு இடையே ஹர்ஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹர்ஷின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளதன் பேரில் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.