செருப்பு தைத்து ஆளாக்கிய பிள்ளைகள் எஸ்கேப்..! ஒரு தடவை பார்த்துவிட ஊர் ஊராக நடக்கும் முதிய பெற்றோர்..! கண்கலங்க வைக்கும் நிகழ்வு!

மரணத்தின் வாசலுக்குள் நுழைவதற்குள் ஒருமுறையாவது பெற்றக் குழந்தைகளை பார்த்துவிடவேண்டும் என தள்ளாத வயதிலும் கிராமம் கிராமமாக வயோதிக தம்பதி அலைந்து திரிகின்றனர்.


பிள்ளைகள் வளர்ந்தவிடன் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத பெற்றோர்கள் தங்களுக்கென எதையும் சேமித்து வைக்காமல் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு கடைசி காலத்தில் சமூகத்தை நம்பி வாழ்க்கையை கழித்து வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறு பகுதியை சேர்ந்த கணேசன், சரசு தம்பதி செருப்புத் தைக்கும் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு பிறந்த பிள்ளைகள் லட்சுமி, சத்யராஜ் 2 பேரும் கேரளாவை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டனர். பின்னர் பெற்றோரை சந்திப்பதையே நிறுத்தி விட்டனர். 

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பார்கள். என்னதான் பெற்றோரை பிள்ளைகள் மறந்துவிட்டாலும் அவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்களை தேடி கன்னியாகுமரி, கேரளா முழுவதும் நடந்தே அலைந்து வந்தனர். தாங்கள் இருக்கும் இடத்தை 2 பிள்ளைகளுமே இவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

செல்லும் இடங்களில் செருப்பை தைத்தும், குடை ரிப்பேர் செய்தும் தங்களது வயிற்றுப் பசியை போக்கி வந்தனர். அடை மழையிலும், கடுங்குளிரிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் அழுக்குத் துணியோடு அவதிப்பட்டு வருகின்றனர். யாராவது உணவு கொடுத்தால் வாங்கி சாப்பிடும் இந்த தம்பதிக்கு வயதாகி விட்டதால் பிள்ளைகளை தேடி அலைய முடியவில்லை.

தற்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் இந்த வயோதிக் தம்பதி வாழ்க்கையை கழிக்கின்றனர். எங்கேயோ ஒரு பெண் பிச்சைக்காரனுக்கு உணவு ஊட்டினால் ஒட்டுமொத்த வாட்ஸ்அப், பேஸ்புக் போராளிகள் வாழ்த்துக்கள் போட்டு தங்களது மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றனர். இதுபோல் உறவுகளை தேடி அலையும் தம்பதியை பார்க்கும்போது அப்படியாக என சொல்லிவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.

இப்போது இந்த தம்பதியின் அவல நிலையை ஊடகங்கள் மூலம் பார்க்கும் கணேசனின் பிள்ளைகள் திரும்பி வந்து அம்மா, அப்பா எனை அழைத்தால் பெற்றோருக்கு மட்டும் அல்ல. நமக்கும் கண்ணீர் வரும்.