பெட்ரோல், டீசல், மின்சாரமும் தேவையில்லை! அறிமுகமானது அதிநவீன அடுத்த தலைமுறை கார்!

டெல்லி: மின்சாரம், எரிபொருள் என எதுவுமின்றி 725 கிமீ செல்லக்கூடிய அழகான கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


எலக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, இந்த புதிய கார் உள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இப்புதிய கார், சூரிய ஒளியை சேகரித்து வைப்பதன் மூலமாக, இயங்கக்கூடியதாகும். சோலார் சக்தியை வைத்து ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், இந்த கார் 725 கிமீ செல்லும்.

இதுதவிர, நேரடியாக, சூரியஒளியை பெற்றுக் கொள்ளும் வகையில் காரின் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே, மேலே உள்ள சோலார் பேனல்களை பயன்படுத்தி, பேட்டரியை ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ஒரு மணிநேரம் இந்த சோலார் பேனல் இயங்கினால், 12 கிலோமீட்டர் செல்வதற்கு  தேவையான சக்தி, பேட்டரிக்கு கிடைக்கும்.

இந்த காரில் நான்கு மின்மோட்டார்கள் உள்ளன. இவை வெறும் 10 நொடிகளில் 100 கிமீ வேகம் போக உதவும். எத்தகைய சீதோஷ்ண நிலையையும் தாங்கக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இதில் பல நவீன தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்த காரின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 1,70,000 டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. லைட் இயர் ஒன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கார், ஆட்டோமொபைல் துறையில் புதிய அதிரடி மாற்றம் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.