பணம் எடுக்க வந்தா படம் எடுக்குது! ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த பாம்பு! கோவை கலாட்டா!

ஏடிஎம் உள்நுழைந்த பாம்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஓட்டம் பிடித்தனர்.


கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையில்  தனியார் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் எப்போதும் வந்த வண்ணமே இருப்பர். அதுபோல செவ்வாய்க்கிழமை என்றும் வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது உஸ் உஸ் என சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று கீழே பார்த்தபோது ஒரு பாம்பு ஒன்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டு பயத்தில் வெலவெலத்து போன அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து பாம்பு பிடிக்கும் வீரர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். ஏடிஎம் எந்திரத்தில் இருந்த பாம்பை பிடிப்பதற்கு அந்த வீரர் மிகவும் போராடினார். ஒருவழியாக மிகவும் போராடி அந்தப் பாம்பை அவர் பிடித்தார். அது மிகவும் விஷமுள்ள நாகப்பாம்பு என்று அந்த வீரர் கூறினார். இதையடுத்து அந்த பாம்பானது வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். பணம் எடுக்கப் போனவர்களுக்கு பாம்பு படம் எடுத்த சம்பவம் ஏடிஎம் வாடிக்கையாளர்களை சற்றே பயமுறுத்தி உள்ளது.