இந்து மகா சபை தலைவரை கடத்திய சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர்! திருச்சி திகுதிகு!

திருச்சி மாநகரம் காந்தி மார்ககெட் பகுதியில் தஞ்சை மாவட்ட இந்து மகாசபை தலைவர் இளையராஜாவை காரில் கடத்திய வழக்கில் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டம் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத் தலைவரான செந்தில்குமாருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக தஞ்சை மாவட்ட அகில பாரத இந்து மகாசபை தலைவர் இளையராஜா என்பவர் 5 லட்ச ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.

உறுதியளித்தப்படி இளையராஜா அரசு வேலை வாங்கி தரவில்லை என்றும், இதனால் பணத்தை திரும்ப தரும்படி இளையராஜாவுக்கு செந்தில்குமார் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். இந் நிலையில் நேற்று இரவு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்த இளையராஜாவை செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து காரில் கடத்தி சென்று உள்ளனர்.

இளையராஜா காரில் கடத்தப்பட்ட சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காந்தி மார்க்கெட் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் காரை விரட்டி சென்ற திருச்சி கும்பகோணத்தான் சாலை அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் இளையராஜா பத்திரமாக மீட்கப்பட்டார்.

மேலும் இளையராஜாவை காரில் கடத்திய செந்தில்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அரசு வேலை வாங்கி தருவதாக இளையராஜா பணம் பெற்றாரா என அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.