விடிய விடிய காத்திருந்த பக்தர்கள்! ஆனால் ஜீவ சமாதி சாமியார் எடுத்த திடீர் முடிவு! சிவகங்கை கூத்து!

சிவகங்கை மாவட்டத்தில் ஜீவசமாதி அடையப் போவதாக பரபரப்பை ஏற்படுத்தி பொதுமக்கள், மக்கள், மீடியாக்களின் நேரத்தை வீணடித்த சாமியார் பொழுது விடிந்ததும் தூங்குவதற்கு சென்றுவிட்டார்.


சிவகங்கை பாசாங்கரையை கிராமத்தில் முதியவர் இருளப்ப சாமி மனைவி மகன், மகளுடன் வசித்து வருகிறார். கிராமத்தில் அவ்வப்போது அருள்வாக்கு சொல்லி வந்த இருளப்ப சாமி தான் ஜீவசமாதி அடையப் போவதாகவும், தான் இறைவனிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதற்காக நாள், நேரம் குறிக்கப்பட்டது. 

நேற்று இரவு இருளப்ப சாமி ஜீவசமாதி அடையப் போவதாக தெரிவித்ததால் அவர் தேர்வு செய்த இடத்தில் குழி வெட்டி பூஜைகள், மலர் அலங்காரம், பந்தல் அமைக்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இந்த செய்தி ஊடகங்கள் மூலம் பரபரப்பாக வெளியாக அவரை பற்றி இதுநாள் வரை தெரியாத பக்தர்களும் இருளப்ப சாமி ஜீவசமாதி அடைவதை பார்க்க பாசாங்கரை கிராமத்திற்கு திரண்டனர்.

அவரைத் தேடி வந்த ஏராளமான பக்தர்கள் ஆசிபெற்றுச் சென்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டம் அதிகமாக கூட போலீஸ் பாதுகாப்ப போடப்பட்டது. பொதுமக்கள் முன்னிலையில் அமர்ந்த சாமியார் இருளப்பசாமி நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 6 மணிக்குள் தனது உயிர் பிரிந்துவிடும் என்று அறிவித்திருந்தார். பக்தி பாடல்கள் விடிய விடிய இசைத்துக் கொண்டிருந்தது.

தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை, போலீசார் நிலைமையை கண்காணிக்க அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உயிர் பிரிவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என கைவிரித்தனர். பின்னர் பொழுது விடிந்துவிட்டதால் சமாதி முடிவை ஒத்தி வைப்பதாக சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டார் இருளப்ப சாமி.

பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒருவர் உயிரிழக்கப் போகிறார் என்றால் எப்படியாவது காப்பற்றிவிடலாம் என்று நினைக்கும் சமூகத்தில்தான் இன்னும் வாழுகிறோமா?