50 நாட்களுக்கு முன் மாயமான சாமி சிலைகள்! திடீரென கோவில் முன் தோன்றிய அதிசயம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகளை திருடிக்கொண்டு மாயமான மர்மநபர்கள் போலீஸ் தீவிரமாக தேடுவதை தெரிந்துகொண்டு மீண்டும் சிலைகளை கோயிலில் வாசலிலேயே வைத்துவிட்டு தப்பியுள்ளனர்.


இடைக்காட்டூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள் கோயிலுக்குள் ஜூன் மாதம் 18ம் தேதி இரவு புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்து 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் ஒன்றரை சவரன் நகைகளுடன் மாயமாகினர்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் போலீசாரிடம் அளித்த புகாரில் 50 கிலோ எடையிலான கரியமாணிக்கப்பெருமாள் சிலை, தலா 20 கிலோ எடையிலான ஸ்ரீதேவி பூதேவி சிலைகள் திருடுபோயுள்ளதாக தெரிவித்தனர். காணாமல் போன சிலைகளின் மொத்த மதிப்பு சுமார் 6 லட்ச ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக போலீசார் தேடிவந்த நிலையில் மர்மநபர்கள் திருடிக்கொண்டு சென்ற 3 சிலைகளையும் ஜூன் 26ம் தேதி இரவு கரியபெருமாள் மாணிக்கம் கோயில் வாசலில் வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கும்போது போலீஸ் தீவிரமாக தேடுவதை தெரிந்துகொண்டு பயந்துபோன கொள்ளையர்கள் சிலைகளை வைத்துவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் அதே ஊரை சேர்ந்த 5 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சிலைகளை எடுத்து சென்றதற்கும், திருப்பி கொண்டு வைத்ததற்குமான வாகன கட்டணம், கடந்த ஒரு மாதமாக சிலைகைளை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கான செலவு, திருடியதற்கான உழைப்புக்கு மட்டும் கோயிலில் இருந்து திருடிய ஒன்றரை சவரன் நகையை மர்மநபர்கள் எடுத்துக் கொண்டார்கள் போலும் என அப்பகுதி மக்கள் கேலி செய்தனர்.