மடத்தில் சிறை வைக்கப்பட்ட கன்னியாஸ்த்ரி! போலீஸ் மீட்பு போராட்டம்

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இன்னொரு கன்னியாஸ்திரியை மடத்தில் சிறை வைத்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.


கேரளமாநிலம் கோட்டையத்தை அடுத்த குருவிளங்காட்டில் ஒரு கன்னியாஸ்திரி மடம் இருக்கிறது. அங்கு பணியாற்றிய ஒரு கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக ஜலந்தர் பிஷப் பிராங்கோ மீது புகார் எழுந்தது.

இந்தச் சம்பவம் கேரளம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி , போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து குருவிளங்காடு போலீசார் பிஷம் பிராங்கோவை கைது செய்தனர். நீண்ட விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப் பட்ட பிராங்கோ சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களையும் போராட்டக்காரர்களையும் அமைதிப் படுத்த கோடிகளில் பேரம் பேசப்படுவதாக சொல்இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிராங்கோவுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் சூடுபிடித்து இருக்கின்றன. அது போன்ற ஒரு போராட்டம் சமீபத்தில் கொச்சியில் நடந்தது.

அதில் ஏராளமான கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் வயநாடு மாவட்டம் காரைக்கா மலையில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாறிஸ்ட் சபையைச் சேர்ந்த லூசி. அவர் அந்தக் கண்டனக் கூட்டத்தில் மிகவும் ஆவேசமாகப் பேசினாராம். இதைத்தொடர்ந்து லூசி மீது சபை நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தது.

சபை அனுமதி இன்றி பத்திரிகைக்குப் பேட்டி அளித்தது,கார் வாங்கியது,என சபை விதி முறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி அவரை மடத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.ஆனால்,லூசி சபையை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே தங்கி இருந்ததுடன் இது குறித்து வாட்டிகனில் உள்ள போபாண்டவருக்கும் புகார் அனுப்பி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள கிளம்பிய போது அவரது அறைக்கதவு வெளிப்புறமாக பூட்டப் பட்டு இருந்ததை அறிந்தார். அதைத் தொடர்ந்து அவர் வெள்ளமுண்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார்,உடனடியாக மடத்துக்கு வந்து பூட்டை உடைத்து லூசியை மீட்டனர்.

இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் சிறை வைக்கப்பட்ட விவகாரத்தால் பிஷப் பிராங்கோ விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது