ஒரு தலை! 2 வாய்கள்! காண்போரை மிரள வைத்த அதிசய மீன்!

நியூயார்க்: இரட்டை வாய் உள்ள மீன் ஒன்றின் புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது.


பொதுவாக, மீன்கள் உள்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஒரே ஒரு வாய்தான் உள்ளது. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் அதிசயமாக, 2 வாய் உள்ள மீன் ஒன்றை பிடித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) அங்குள்ள லேக் சாம்ப்ளெய்ன் பகுதியில் தனது கணவருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த அந்த பெண், தன்னிடம் சிக்கிய மீன் ஒன்றை நீருக்கு வெளியே எடுத்து பார்த்தபோது வியப்பின் உச்சத்திற்கு சென்றார். ஆம், அந்த மீனுக்கு 2 வாய் இருந்துள்ளது. 

இதுபற்றிய புகைப்படங்களை எடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அத்துடன், மீன்பிடி தொடர்பான நிகழ்வுகளை ஊக்குவிக்கும் Knotty Boys Fishing என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும் அவற்றை ஷேர் செய்ய, இதன்மூலமாக தற்போது உலக அளவில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

''2 வாய் உள்ள மீனைப் பிடித்ததும் நான் நம்பவில்லை. இப்படி ஒரு அதிசய மீன் உடல்நலத்துடன் உயிர்வாழ்வதைக் கண்டு வியந்து போனேன்,'' என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால், இதுபற்றி உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 2 வாய் உள்ள உயிரினம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த மீனுக்கு ஒருவேளை தாடைப் பகுதியில் ஏதேனும் காயம்பட்டு அது வாய் போல கிழிந்திருக்கலாம். பார்ப்பதற்கு, அது வாய் போலவே இருந்திருக்கலாம், என்று குறிப்பிடுகின்றனர்.