ஆட்டிசக்குழந்தையை அரக்க குழந்தையாக மாற்றிய சித்த வைத்தியர் தணிகாசலம்..! ஒரு தந்தை வெளியிட்ட பகீர் தகவல்!

ராஜ் டிவி, தமிழன் டிவி, விண் டிவி போன்ற ‘டெல்லி செட்’டுகளின் புண்ணியத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த பலருக்கு, யு ட்யூப் பெரிய கொடுப்பினை. மொத்த டுபாக்கூர்களும் இப்போ ஒரே வண்டியில்!


நல்ல மாதிரியாக இருந்த நாட்டு வைத்தியத்துக்கு வேட்டு வைத்த புண்ணியவான்களின் லிஸ்ட் பெருகிக் கொண்டே போவது ஒருவகையில் வேதனைதான். பெயருக்கு பின்னால் இங்கிலீஷ் எழுத்துகள் சேர சேர, அம்மருத்துவர்கள் எழுதும் பிரஸ்கிருப்ஷன்கள் பிருஷ்டத்தை பதம் பார்த்துவிடுகிறது. நாட்டு வைத்தியர்கள் வளம் பெற இத்தகைய பணம் பிடுங்கிகளும் ஒரு வகையில் காரணம். (காலப்போக்கில் இவர்களும் அலோபதியர்களை மிஞ்சிவிட்டார்கள்) 

பேய்க்கும் நோய்க்கும் பெரிய வித்தியாசமில்லை. பேய்க்கு வேப்பிலை! நோய்க்கு பச்சிலை! அங்கே பூசாரி. இங்கே மருத்துவர். நல்ல மருத்துவர்கள் அமைவது அவரவர் அதிர்ஷ்டம். ‘சுண்டு விரல் நகம் பேர்ந்துருச்சுன்னு போனேன். கட்டை விரலையே கழட்டி எடுத்துட்டான்’ என்று புலம்புகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை. 

அப்படியொரு துரதிருஷ்ட துரியோதன தினத்தில்தான் நான் டாக்டர் Moneyகாசலத்தை சந்தித்தேன். இருபது வயது நிரம்பிய என் மகன் அபிஷேக் இரண்டு வயதிலிருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். போகாத டாக்டரில்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. கட்ட கடைசியில் இங்கிலீஷ் மருந்துக்குதான் அடங்குகிறது எல்லாம். இருந்தாலும் நோயை கட்டுப்படுத்துவதை விட இல்லாமல் செய்வதுதானே இன்பம்? தேடிக் கொண்டேயிருக்கிறேன் ஒரு சிறப்பான வைத்தியத்தை. 

ஒரு முறை பேஸ்புக்கில் மேயும்போதுதான் டாக்டர் Moneyகாசலத்தை பற்றி அறிய நேரிட்டது. இதுவரை நான் படித்தவர்களை விட பழகியவர்களை விட இவர் சற்று உண்மையாக இருப்பாரோ? அறிவுக்கண்ணை திறக்கிற அளவுக்கு இருந்தது அவரது அனுபவ ஹிஸ்ட்டிரிகளும், அறிவின் மிஸ்ட்ரிகளும்! நல்லவேளை... Moneyகாசலத்தின் ஃபிரண்ட் லிஸ்ட்டில் எனக்கு நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான டி.வி.எஸ்.சோமு இருந்தார். நான் சட்டென சோமுவுக்கு போன் அடித்தேன்.

விஷயத்தை சொன்னவுடன், பையனுக்காக உச் கொட்டினார். ‘இதைவிட எனக்கு என்னங்கய்யா பெரிய வேலை. இப்பவே பேசுறேன்’ என்றார். அடுத்த ஐந்தாவது நிமிஷம் லைனுக்கு வந்தவர், ‘எல்லாத்தையும் சொல்லிட்டேன். இந்தாங்க நம்பரு. போன் அடிச்சுட்டு போயிருங்க’ என்றார். 

வாசலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காத்திருக்க, தெய்வம் இன்னோவாவில் வந்திறங்கியது. ஒரு அரசியல்வாதியின் கம்பீரத்தோடு உள்ளே போனவர், போன வேகத்தில் அழைத்தார் என்னை. ‘சோமு சொன்னாரு. பையனுக்கு வயசு என்னா?’ என்றார். அவனை மேலே கீழே பார்த்தவர் தொட்டுக் கூட பார்க்கவில்லை என்பதுதான் கூடுதல் அம்சம். 

‘மாசம் பத்தாயிரம் ஆவும். மூணு வருஷத்துக்கு கொடுக்கணும். முடியுமா?’ ‘அது ஒண்ணும் பிரச்சனையில்ல சார்’ என்றேன். ‘சோமு அனுப்புனதால மூவாயிரம் டிஸ்கவுன்ட். ஏழாயிரம் கொடுங்க. வெளியில் வெயிட் பண்ணுங்க’ என்றார் இயந்திரம் போல. அதிகபட்சமாக இரண்டு நிமிஷங்களில் முடிந்து போனது டெஸ்ட்டிங். ரேட் பிக்சிங் எல்லாம். 

மனுஷன் பேசாட்டி என்ன. மருந்து பேசும் என்ற முடிவோடு ஏழாயிரத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தேன். போத்தீஸ், சரவணாஸ் ஸ்டைலில் ஒரு பெரும் பை. உள்ளே பாட்டில் பாட்டிலாக மாத்திரைகளும் திரவங்களும். ‘எல்லாத்துக்கும் மேலேயே அளவும் எப்பப்போ கொடுக்கணும்னு எழுதியிருக்கேன். அடுத்த மாசம் வாங்க’ என்றார். பை கை மாறியது. 

அதற்கப்புறம் நான்கு மாதங்கள். ஒரே சீன் திரும்ப திரும்ப ஓடியது. ‘பணம் கொடுங்க’. ‘வெளியில் உட்காருங்க’.  ‘பை இந்தாங்க’ ‘சார்... பையன்ட்ட வர்ற மாறுதல் அப்படியே வேற மாதிரி இருக்கு. நோய் இன்னும் முத்திகிட்டே வருது. அமைதியா இருந்தவன் அரகன்ட்டா மாறிட்டே வர்றான். ரொம்ப ரெஸ்ட்லெஸ்சா இருக்கான்’ என்று ஒவ்வொரு மாதமும் நான் சொல்வதும், ‘அதுக்கு வேற கொடுத்துருக்கேன்’ என்று அவர் சொல்வதுமாக இருக்க, மகனின் நிலைமை அரக்கனின் நிலைமைக்கு போய் கொண்டிருந்தது. 

நான் குடியிருக்கும் தெருவின் கடைசியிலிருந்த ஒரு வீட்டுக்காரர், ‘பையன் ரொம்ப கத்துறான் போலிருக்கே?’ என்றார். அவனின் கூச்சலில் வீடே அமைதியிழந்தது. இந்த முறை அவரை சந்திக்கும் போதும் சற்று அழுத்தமாகவே சொன்னேன். சார் இப்படி இப்படி என்று. ‘ம்... அப்படியா? பணம் கொண்டு வந்திருக்கீங்களா?’ என்றார் வழக்கம்போலவே. 

இயற்கை வைத்தியம் யானை மாதிரி. பாகன்கள்தான் பிச்சையெடுக்க வைக்கிறார்கள். எட்டணாவோ, நாலணாவோ... வைத்தால்தான் ஆசி! பணம் ஒரு மேட்டரே அல்ல என்பதை எப்படி நான் அவருக்கு உணர வைப்பேன்? 

சரி... சில மருந்துகள் நோயை கிளப்பிவிட்டு அடக்கும் போல... என்று நினைத்து அமைதி கொண்டாலும், வீடு அமைதியாக இல்லை. உலகம் தெரியா குழந்தையை மருந்து என்ற பெயரில் கஷ்டப்படுத்துகிறோம் என்று மட்டும் புரிந்தது. திடீரென நள்ளிரவில் உள் மனசு என்னவோ சொல்ல, விழித்துக் கொண்டேன். அருகில் படுத்திருந்த மகனை காணவில்லை. பதற்றத்தோடு எழுந்தால் நட்ட நடுராத்திரியில் குளித்துவிட்டு ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தான். அவ்வளவுதான்... இனி Moneyகாசலத்தை பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். 

மறுநாளே கிளம்பி ஓடினேன். வில்லிவாக்கத்திலிருக்கும் ஒரு நீரோ சைக்காலஜி மருத்துவரிடம் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். அரை மணி நேரம் மகனை சோதித்தார். ‘பதற்றம் வேண்டாம். இதைக் கண்ட்டினியூ பண்ணுங்க’ என்று சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு வீடு அமைதி நிலைக்கு திரும்பிவிட்டது. 

இப்பவும் மன்னாரங் கம்பெனியிலிருந்து மாதம் தோறும் நினைவூட்டல் எஸ்.எம்.எஸ் வரும். அண்மைக்காலமாக யு ட்யூப்களிலும் டி.விகளிலும் ‘கொரானோவுக்கு மருந்து எங்கிட்ட இருக்கு. நம்புங்கடா, இல்லேன்னா செத்துப்போவீங்க’ என்கிறார் Moneyகாசலம். 

மருந்தைவிட வீரியமாக இருக்கிறது Moneyகாசலத்தின் வாய்! 

-ஆர்.எஸ்.அந்தணன்