அதிர்ச்சி தரும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்! - 1 சதவிகிதம்கூட தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்.

தமிழகத்தில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. கிட்டதட்ட 1.6 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற செய்தி கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை 2011 முதல் அமலில் உள்ளது. அதன் அடிப்படையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை 1,62,313 பேர் எழுதினர்.

தேர்வுகள் முடிவுகள் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் www.trb.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் விவரங்களுடன் வெளியிடப்பட்டது. 150 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட தேர்வில் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அதாவது 482 தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணாக ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு தேர்வர்களுக்கு 82, , ஒசி தேர்வர்களுக்கு 90 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த தேர்வில் அதிகபட்சமாக ஒரே ஒரு தேர்வர் மட்டுமே 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  80 மதிப்பெண்களுக்கு மேல் 843, 90 மதிப்பெண்களுக்கு மேல் 72 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வுக்கு தயாராக 4 மாதம் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும் மற்றும் வினாத்தாள் முன் எப்போதும் இல்லாத விதத்தில் கடுமையாக இருந்ததாகவும் அதனால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக தேர்வர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆனால் நீட் போன்ற தேசிய தகுதி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால், வினாத்தாள் கடினமாக வடிமைக்கப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கும் வகையிலும் அவர்களது கல்வி சிறந்த முறையில் விளங்கவும் ஆசிரியர்களுக்கு தகுதி இருந்தால்தான் சாத்தியம் என கருதும் பெற்றோர்கள் படிப்பில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளித்து எதிர்காலங்களில் ஆசிரியர் பணி வழங்கினால் இந்தியா கல்வியில் முன்னோடி நாடாக உலக அரங்கில் வலம் வரும் என கருத்து தெரிவிக்கின்றனர்.