இப்படி சொல்லலாமா நிர்மலா சீதாராமன்..? பெட்ரோல் விலை குறைப்பதில் அவர் கையில் எதுவும் இல்லையாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூச்சல் போட்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. இப்போது பெட்ரோல் விலை உயர்வில் கையை விரித்துள்ளது.


இதுகுறித்து நிர்மலா சீதாராமனிடம், ஏன் நீங்கள் பெட்ரோல், டீசலுக்கு வரியைக் குறைக்கத் தயங்குகிறீர்கள்? மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.30 முதல் ரூ.32 வரை எடுத்துக் கொள்கிறது. மாநில அரசுகள் ரூ.19 முதல் ரூ.20 வரை எடுத்துக் கொள்கிறது என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், ‘பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அரசு கையில் ஒன்றும் இல்லை.கடந்த நவம்பர் மாதம் முதல் உலகளவில் எண்ணெய் விலை ஏறிக்கொண் டிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைக்க வேண்டுமென்றால், மத்திய அரசு வரியை குறைப்பது மட்டும் தீர்வாகாது. மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றாக அமர்ந்து இதுகுறித்து பேச வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது மற்றொரு வாய்ப்பாக இருக்கிறது. அது நாடு முழுவதும் ஒரே விலை இருப்பதை உறுதி செய்யும். ஜிஎஸ்டி கவுன்சில் அது குறித்தான சாத்தியங்களை ஆராயும்.ஆனால், இறுதியில் மத்திய அரசும் மாநில அரசுகளும் கலந்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணயம் தொடர்பாக, பெட்ரோலிய அமைச்சம் தெளிவாக பதில் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார்.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்படி பேசியிருப்பது பா.ஜ.க.வினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.