லட்சுமி விலாஸ் வங்கிக்கு கடும் நெருக்கடி! பங்குகள் சடசடவென இறங்கியது!

தனியார் துறை வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் வீட்டுக் கடன் நிறுவனமான இண்டியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் இணைப்பிற்காக முன்மொழியப்பட்டிருந்தது.


இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் 09 தேதியிட்ட அறிக்கையில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இந்தியாபுல்ஸ் கமர்ஷியல் கிரெடிட் லிமிடெட் ஆகியவற்றை லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் இணைப்பதற்கான விண்ணப்பத்தை அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்து இந்த இணைப்பு திட்ட வரைமுறையை நிராகரித்துள்ளது.

2016 ஆகஸ்ட் முதல் ரிசர்வ் வங்கி. வங்கிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கி உரிமத்திற்கு விண்ணப்பிக்க NBFCக்களுக்கு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டலை பின்பற்றி லக்ஷ்மி விலாஸ் வங்கியுடன் இணைவதற்கு தேர்வு செய்தது. அதே நேரத்தில், இந்த இணைப்பு பெரும்பாலும் வங்கி உரிமத்தை அணுகுவதற்கான ஒரு வழியாகவே கருதியது இந்நிறுவனம்,

ஏனெனில் லட்சுமி விலாஸ் வங்கி ஒரு பரந்த நெட்வொர்காகவோ அல்லது ஒரு பெரிய வைப்பு தொகையைக் கொண்ட வங்கியாக இல்லாத காரணத்தால் இவ்வங்கியை இலகுவாக இணைக்க முடியும் என்கிற நோக்கில் இந்த இணைப்பிற்கான வேலையில் இறங்கியது.

இவ்வேளையில் இந்த இணைப்பிற்கு குறிப்பிட்ட அளவு பங்குகள் வீதத்தை குறிப்பிடாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர். லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த வங்கி தற்போது அதிலிருந்து மீள்வதற்கு புதிய உத்தியை ரிசர்வ் வங்கியிடம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளது.

ஆனால் கடந்த மாதம் ரெலிகேர் ஃபின்வெஸ்ட் நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் மோசமான கடன்கள், பலவீனமான மூலதனம், நிகர சொத்துக்களுக்கு எதிர்மறையான வருவாய் மற்றும் அதிக அந்நியச் செலாவணி ஆகியவற்றின் காரணமாக ஏற்கனவே செப்டம்பர் 29 தேதி முதல் லக்ஷ்மி விலாஸ் வங்கி prompt corrective action எனப்படும் உடனடி திருத்த நடவடிக்கையின் கீழ் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

லக்ஷ்மி விலாஸ் வங்கி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 237 கோடி நஷ்டம் அமைந்துள்ளதாகவும். அதன் மொத்த வராக் கடன் 17.30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும். நிகர வராக் கடன் அளவு 8.3 சதவிகிதமாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த வங்கியின் தலைமை நிர்வாகி அதிகாரியாக இருந்த பார்த்தசாரதி முகர்ஜி ஆகஸ்ட் 29 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இந்திய பங்குச் சந்தையில் பலமாக எதிரொலித்தது.

இதனால் கடந்த புதன்கிழமை இறுதி வர்த்தகத்தின் பணி இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸின் பங்குகள் 18.85 சதவீதம் குறைந்தது.மேலும் இந்த பங்குகள் 52 வார வீழ்ச்சியாக 187.50 ரூபாயை எட்டியது. அடுத்ததாக எல்விபியின் பங்குகளும் 52 வார வீழ்ச்சியாக 25.65 ரூபாயாக இறங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் இதுவரை சுமார் 71 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து உள்ளது இந்த வங்கியின் பங்குகள்.

மணியன் கலியமூர்த்தி