மாநிலத்தில் மிகப்பெரிய பணக்கார குடும்பம்..! ஒருவர் பின் ஒருவராக 7 பேர் மர்ம மரணம்! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

திருவனந்தபுரம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொன்றுவிட்டு, சொத்துகளை அபகரித்த 'வேலைக்காரன்' பற்றிய கதைதான் இந்த செய்தியில் நாம் படிக்கப் போகிறோம்.


கேரள மாநிலம், காரமணா போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட குலதாரா பகுதியை சேர்ந்தவர் கோபிநாதன்  நாயர். இவரது மனைவி சுமுகி அம்மா, இவர்களுக்கு 3 வாரிசுகள் மற்றும் மைத்துனர்கள் 2 பேர் இருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் ஒவ்வொருவராக, கடந்த 20 ஆண்டுகளில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதில், கடைசியாக எஞ்சியிருந்தவர் கோயிநாதனின் மைத்துனர் ஜெயமகாதேவன் நாயர் ஆவார். அவரும் கடந்த 2017ம் ஆண்டு உயிரிழக்கவே, இந்த குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.30 கோடி மதிப்புடைய சொத்துகளின் மீது உரிமை கோரி ரவீந்திரன் நாயர் என்பவர் நடவடிக்கை மேற்கொண்டார். ரவீந்திரன் அந்த வீட்டில் நீண்ட காலமாக, வேலைக்காரனாக பணிபுரிந்து வந்தவர் ஆவார். ஆனால், இந்த உண்மையை சட்டத்திற்கு தெரியாமல் மறைத்துவிட்டு, தன்னையும் சொத்திற்குரிய வாரிசு போல காட்டிக் கொண்டிருக்கிறார்.  

ஆனால், சொத்தின் உரிமையாளரான கோபிநாதனின் மனைவி சுமுகி வழி உறவினர்கள் சிலருக்கு இதன்மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதன்பேரில் அவர்கள் வழக்கு தொடரவே, அவர்களுக்கு சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து ரவீந்திரன் சமாதானப்படுத்தியுள்ளார். ஆனால், வெளி உலகிற்கு அவர்கள் வாரிசாக இருந்தாலும், உள்ளே ரவீந்திரன் பலவிதமான காய்களை நகர்த்தி அவர்களை எதுவும் செய்ய முடியாத வகையில் டம்மி செய்து வந்துள்ளார். அவர்களில் ஒருசிலர் வெளியூருக்குச் செல்வதும், சிலருக்கு மனநிலை பாதிக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளது. இப்படியே நாட்கள் சென்ற நிலையில், அவர்கள் யாருக்குமே தெரியாமல் ரவீந்திரன் அந்த சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.  

இதையடுத்து, அண்டை வீட்டில் வசிக்கும் அனில்குமார் என்பவர் இதுபற்றி கேரள முதல்வர் அலுவலகத்திற்கு நேரடியாக புகார் செய்தார். வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் வீட்டு வேலைக்காரன் ரவீந்திரன், பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை ஆட்டை போட்டுவிட்டதாகவும், இவை அனைத்தும் சட்டப்படி அரசுக்கு சேர வேண்டிய சொத்துகள் எனவும் அதில் அனில்குமார் கூறியிருந்தார். இதுதவிர, கோபிநாதனின் வீட்டினர் அனைவரும் உயிரிழந்ததில் மர்மம் நிலவுவதால் இதுபற்றி உரிய விசாரணை நடத்தவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.  

இதையேற்று, தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோபிநாதனின் குடும்பத்தினரின் சடலங்களை வைத்து மறு பிரேத பரிசோதனை செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

சமீபத்தில்தான் கேரளாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை பெண் ஒருவர் சயனைடு கலந்து கொன்று பழிவாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.