தமிழை செம்மொழியாக்கிய செந்தமிழன் கலைஞர்! எப்டி தெரியுமா?

சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கும் முறையை தொடங்கி வைத்தார். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தார்.


கருணாநிதி அளவுக்கு உயரம் தாண்டியவர்கள், தமிழக அரசியலில் இதுவரை எவரும் இல்லை. ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வர், தொடர்ச்சியாக 11 முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர், 38 வயதில் தி.மு.க. பொருளாளர், 44 ஆண்டுகளாகத் தி.மு.க-வின் தலைவர் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். 32 வயதில் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆன ஒருவர் 90 வயதிலும் அதனைத் தக்கவைத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் அதிசயம். 1957-ல் அவரோடு சட்டசபைக்குள் போனவர்களில் இவர் மட்டுமே இன்னும் சபையை அலங்கரிக்கிறார்.

எதையும் தாங்கும் இதயம் இங்கு உறங்குகிறது’ என்று அண்ணாவின் கல்லறையில் எழுதிய கருணாநிதி, 'ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான் என்று எனது கல்லறையில் எழுதுங்கள்’ என்று எப்போதோ உத்தரவு போட்டுவிட்டார்.

பள்ளியில் படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் முதன்முதலாக 1939-ம் ஆண்டு கருணாநிதி பேச்சைத் தொடங்கினார். அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து 'மாணவ நேசன்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். முதன்முறையாக அவர் தொடங்கிய இந்தப் பத்திரிகை ஒரு மாத இதழ். அவர் முதல் முறையாகத் தொடங்கிய அமைப்பு 'தமிழ் மாணவர் மன்றம்'.

சென்னையில் வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், பூம்புகார் மீட்டெடுப்பு, பெரியார் சமத்துவபுரம், குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடியில் கற்சிலை, கோவையில் உலக செம்மொழி மாநாடு, உணவுப் பாதுகாப்புகாக இந்திய உணவுக் கழகத்தைப்போல, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.  

நாட்டிலேயே முன்னோடித் திட்டமாக மகளிர் திருமண உதவித் திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ் அறிஞர்கள் உதவியோடு, தமிழ் ஆண்டு வரிசைக்கு, 'திருவள்ளுவர் ஆண்டு' என்ற முறையைக் கொண்டு வந்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்து, பெருமை சேர்த்தவரும் கருணாநிதிதான்.

தன் முதல் மகன் முத்துவுக்குத் தன் தந்தை முத்துவேலரின் பெயரைச் சூட்டியவர், இரண்டாவது மகனுக்கு அரசியல் ஆசான் அழகிரி யின் பெயரையே சூட்டினார். ஸ்டாலினுக்கு அவர் சூட்ட திட்டமிட்டிருந்த பெயர் அய்யாதுரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாவையும் குறிப்பது. ஸ்டாலின் பிறந்த 1953 மார்ச்சில்தான் ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் மறைந்தார். கம்யூனிஸத்தின் மீது கருணாநிதிக்கு இருந்த காதலின் விளைவோடு இந்தச் சூழலும் சேர அய்யாதுரை ஸ்டாலின் ஆகிவிட்டார்!