கமல் வெள்ளையா அழகா இருக்குறதால ஓட்டு போட்டுடானுங்க! புலம்பித் தள்ளும் சீமான்!

சென்னை: கமல்ஹாசன் வெள்ளையாக இருப்பதால் மக்கள் அவரை நம்பி ஓட்டுப்போட்டுள்ளார்கள் என்று, சீமான் விமர்சித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தற்போது நடந்துள்ள மக்களவைத் தேர்தலில், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ஆனாலும், தமிழகம் முழுக்க அவரது கட்சி பெற்றுள்ள வாக்கு சதவீதம் கடந்த ஆண்டுகளைவிட தற்போது உயர்ந்துள்ளது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், 3, 4ம் இடங்களை பெற்று அசத்தியுள்ளனர்.

அதேசமயம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் உள்ள நாம் தமிழர் கட்சிக்கு, இந்த முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த வாக்கு விகிதமும், சீமானுக்குக் கிடைத்த வாக்கு விகிதமும் சம அளவாக உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பற்றி சீமான், வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். 

அந்த பேட்டியில், ''கமல்ஹாசன் 50 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கிறார். அதனால், அவருக்கு மக்களிடையே நல்ல அறிமுகம் உள்ளது. அத்துடன் அவர் வெள்ளையாக இருப்பதால், மக்கள் அவரை நல்லவர் என நம்பி ஓட்டுப் போட்டுள்ளார்கள். கொங்கு மண்டலத்தில் வழக்கமாக எனக்குக் கிடைக்கும் ஓட்டுகளை இந்த முறை கமல்ஹாசன் வாங்கிவிட்டார்.

அதேசமயம், நான் இதனால் சோர்ந்து விட மாட்டேன். எனது இலக்கு பெரியது. அதற்காக, எத்தனை சோதனைகள் வந்தாலும் தாங்க தயாராக உள்ளேன். வர உள்ள சட்டமன்ற தேர்தலில் இன்னும் வியூகத்தை விரிவுபடுத்தி, நாம் தமிழர் கட்சி களம் இறங்கும்.

எத்தனை தேர்தல்கள் வந்தாலும் நாங்கள் தனியாகத்தான் போட்டியிடுவோம்.  திமுக.,வைப் போலவோ, பாஜக.,வைப் போலவோ காசு கொடுத்தும், ஓட்டு இயந்திரங்களில் மோசடி செய்தும் வெற்றிபெற எங்களுக்கு தேவையில்லை. மக்களின் ஆதரவை எதிர்பார்த்தே களம் காண்கிறோம்.  எங்களை ஒரு பொதுக்கட்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர். அதற்கு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளே சாட்சி,'' என்று காரசாரமாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.