சீமான் ஜெயிச்சது ஒண்ணுதான். ஆனா, ஓட்டு அதிகம் வாங்கிட்டாங்களாம்!

தொண்டை கிழிய கத்தி பிரசாரம் செய்தும், உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு பதவி மட்டுமே சீமான் கட்சிக்குக் கிடைத்துள்ளது. அதேபோன்று ஒரு வேட்பாளர், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கி அவமானப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், சென்னை, வேலப்பன் சாவடி, கே.வி.என். திருமண மண்டபத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் பதவி பெற்றதைவிட, நாம் அதிக வாக்குகள் வாங்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறோம். அடுத்து நமக்கு வெற்றி கிடைத்தே தீரும் என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறார் சீமான். இந்த நிலையில், இன்று நாம்தமிழர் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான சில தீர்மானங்கள் மட்டும் இங்கே. 

* இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் அடிநாதமாக விளங்கும் மதச்சார்பின்மை எனும் மகத்தான கோட்பாட்டினை அடியோடு தகர்த்து, நாடு முழுமைக்கும் வாழும் இசுலாமிய மக்களைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் நோக்கோடு கொண்டு வரப்பட்டிருக்கிற குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. 

* ஒரே நாடு! ஒரே தேர்தல்!’, ‘ஒரே நாடு! ஒரே சட்டம்!’, ‘ஒரே நாடு! ஒரே தேர்வு’, ‘ஒரே நாடு! ஒரே தீர்ப்பாயம்!, ‘ஒரே நாடு! ஒரே பொதுவிநியோகம்’ என நீளும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஒருமுகமாக்கலும், ஒற்றைமயப்படுத்தி இந்தியாவை இந்து நாடாக்கக் கட்டமைக்க முயலும் அபாயகரமானப்போக்கும் இந்நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் பேராபத்து என நாம் தமிழர் கட்சி பேரறிவிப்பு செய்கிறது. 

* பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காது சென்றிருப்பதன் மூலம் வெங்காயம், பூண்டு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். ஆகவே, பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசித்து நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

* குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களிலும், டெல்லியிலும், தமிழகத்திலுமென எனப் பற்றிப் படர்ந்தப் போராட்டங்களில் பங்கேற்று உரிமைக்காகக் குரலெழுப்பிய மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் மீது கொடுந்தாக்குதலை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பாஜக அரசின் அரசப்பயங்கரவாதத்தை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

* ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 29 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலைசெய்யக் கோரி தமிழகச் சட்டமன்றத்தில் 161வது சட்டப்பிரிவின்படி தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டுக்கு மேலாகியும் அதற்கு ஒப்புதல் தர மறுக்கும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. தமிழக அரசு எழுவர் விடுதலையை உடனடியாகச் சாத்தியப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

* சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான நீட் எனும் ஒற்றைத்தகுதித் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றியத் தீர்மானத்தை ஏற்று தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்குதர மத்திய அரசு முன்வர வேண்டும்.  

* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், உயர் மின்னழுத்தக்கோபுரம் அமைத்தல், அணு உலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ உலை, எட்டுவழிச்சாலை என இம்மண்ணையும், அதன் வளத்தையும் பாதிக்கக்கூடியப் பேரழிவுத்திட்டங்கள் யாவற்றையும் மக்களின் உணர்வுகளை மதித்து திரும்பப் பெற வேண்டும். 

* தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பிலும், மத்திய அரசின் பணியிடங்களிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கச் சட்டமியற்றிச் செயலாக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை இப்பொதுக்குழு வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

* தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் மீது பொய் வழக்கைப் புனைந்து சிறைப்படுத்தியது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நிகழ்ந்த பேரவமானம் என நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

* சனநாயகத் திருவிழாவான தேர்தல் முறையில் எவ்வித ஐயமும் ஏற்படாதிருக்க, மக்களின் நம்பகத்தன்மை சிதைவுறாது நீடிக்க தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையிலே நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.