தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டில் நீதிபதியா? என்ன கொடுமை இது, சீமான் ஆவேசம்

சிவில் நீதிபதிக்கான பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வை தமிழ் தெரியாதவர்களும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் சீமான்.


உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்திட அனுமதி வேண்டி நீண்டகாலமாக வழக்கறிஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் புறந்தள்ளி வருவதென்பது சகிக்க முடியாதப் பெருங்கொடுமை.

உயர்நீதிமன்றங்களில் ஏற்கனவே தமிழ் மொழி இல்லாத நிலைமை நீடிக்கிறது. இப்போது எளிய மக்கள் இறுதியான நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் மொழியை இல்லாமல் ஆக்குகிற வேலையை மத்திய, மாநில அரசுகள் செய்யத் தொடங்கி இருப்பது என்பது ஏற்கனவே அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற தமிழ்மொழியை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான செயல்திட்டமேயாகும். 

தமிழ்மொழி தெரியாமலேயே தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாக ஆகிவிட முடியும் என்கிற நிலையை உருவாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டு நீதிமன்றங்களை தமிழ்மொழி தெரியாத, தமிழர்கள் அல்லாதவர்களின் கையில் ஒப்படைப்பதற்கான பெரும் சதியாகவே இதைக் கருதுகிறேன். அவ்வாறு நடந்தால் சாமானிய மக்கள் தங்களது இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கிற நீதி பரிபாலன முறை முற்றிலுமாகத தகர்க்கப்படும்.

தமிழ்மொழி தெரியாத நீதிபதிகள் நீதிமன்றங்களில் வந்து அமரும்போது மக்களின் சாட்சியங்களை, வழக்கறிஞர்களின் வாதங்களை, நமது மண்ணின் வாழ்வியல் பண்பாட்டு அம்சங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவறாகத தீர்ப்பு வழங்கி விடக்கூடிய மாபெரும் அபாயம் இன்று தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அபாயத்தை புரிந்து கொண்டுதான் பெருமதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் பெருமக்கள் தமிழ் சமூகத்தை காப்பாற்றிட மாபெரும் போராட்டங்களை தொடங்கியுள்ளார்கள்.

தமிழ்ச்சமூகத்தின் எல்லாவிதப போராட்டங்களிலும் இந்த மண்ணைக் காக்க தமிழர்களின் உரிமையை காக்க இரத்தம் சிந்தி உறுதியாகப் போராடி வருபவர்கள் தமிழக வழக்கறிஞர் பெருமக்கள் ஆவர். ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டம் தொடங்கி எண்ணற்றப் போராட்டங்களில் வழக்கறிஞர்களின் உறுதியான போராட்டங்களே தமிழ் மண்ணை காக்கிற பெரும் ஆயுதங்களாக திகழ்கின்றன.

தமிழ் தெரியாதவர்கள் சிவில் நீதிபதிகளாக ஆகிவிடலாம் என்கின்ற வகையில், 2016ல் தமிழக அரசு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் ஆணை பிறப்பித்தது. இந்த ஜிழிறிஷிசி அறிவிப்பாணை 25/2019யைத் திரும்பப் பெறக்கோரி வழக்கறிஞர்கள் தமிழ்நாடெங்கும் இன்று நடத்துகிற மாபெரும் உண்ணாநிலை போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு, அப்போராட்டம் மாபெரும் வெற்றியடைய எனது புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றென்றும் பெருமதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும், அவர்களது போராட்டத்தை முழுமையாக ஆதரித்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடன் நிற்கும் என்றும் இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.