விவசாயப் பெருமக்கள் போராட்டத்துக்கு நாம் தமிழர் துணை நிற்கும். சீமான் ஆவேசம்

உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதி வழியில் மண்ணின் உரிமைக்காக அல்லும் பகலும் அயராது போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது போற்றுதலுக்குரியது. அதேநேரத்தில், கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது ஈவு இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மை செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள இப்புதிய வேளாண் சட்டங்கள் வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளைப் பெருநிறுவனங்களின் கூலிகளாக மாற்றும் கொடிய சதித்திட்டமின்றி வேறில்லை. இதை எதிர்த்துத்தான், வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு உழவர்கள் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர்.

ஆனால், வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல், அலட்சியம் செய்வதுடன் போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும். இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரண்டு வருகின்றன.

கடந்த நான்கு நாட்களாக நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறையினரும் டெல்லி போராட்டக் களத்தில் நேரடியாகப் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்து வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

ஆகவே, இத்தருணத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கண்டித்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் நாடு தழுவிய அளவில் உழவர் பெருமக்கள் நாளை முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் எனவும், அவர்களின் நியாயமான போராட்டம் வெல்ல இறுதிவரை துணை நிற்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.