அன்பு அண்ணன் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாளில், மாவீரர்களை நினைவு கொள்வோம். சீமான் சூளுரை

தமிழர்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்ப களத்திலே விதையாய் விழுந்த மாவீரர் தெய்வங்களின் இலட்சியக்கனவை ஈடேற்ற உழைத்திட உறுதியேற்போம் என்று சீமான் சூளுரை செய்திருக்கிறார்.


இப்பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும் வரை தமிழீழம் சாத்தியம்தான் என்பதை நம் சத்தியத்தலைவர் பிரபாகரன் அவர்களது வாழ்க்கையிலிருந்து நாம் எடுத்துக் கொள்கிற தத்துவமாக இருக்கிறது. மன உறுதி குலையாமல், விடுதலை நோக்கம் சிதையாமல் தமிழினம் தனது விடுதலைப்பாதையில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான் நம் தலைவர் பிறந்த நாளில் நாம் எடுத்துக்கொள்ளும் ஆணையாக அமைகிறது. 

இன்று நவம்பர் 27.மாவீரர் நாள். நமது தாய்மண் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தந்து விதையாக விழுந்து விண்ணேறிச் சென்ற வீர மறவர்களின் புனித நாள். தாயக விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு, தன் மூச்சை விடுதலை தானமாகத் தந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் கமழ்கிற உள்ள பெருமூச்சாய் மாறிப்போன மாவீரர்களின் மகத்தான தியாக நாள்.

இந்தக் கார்த்திகை நாள்தான் காந்தள் மலர் சூட்டி, கந்தக நெருப்பாய் காற்றில் கலந்துபோன, வீர காவியங்களாய் நம் விழிகளில் உறைந்திருந்து நாம் வழிபடும் தெய்வங்களாக மாறியிருக்கிற நமது மாவீரர் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாள்.

உலக வரலாறு எத்தனையோ மாவீரர்களைத் தியாகச் சீலர்களைத் தனது பெரும் பயணத்தில் கண்டிருக்கிறது. ஆனால், தமிழர்களின் தாய் நிலமான தமிழீழத்தில், தாய்மண் விடுதலைக்காகத் தோன்றிய நம் மாவீரர்கள் போல இதுவரை இந்த உலக வரலாறு யாரையும் கண்டதில்லை.

உயிர்போகும் எனத் தெரிந்தும் உவகைப் பெருகும் உள்ளத்தோடு, புன்னகை மாறாத முகத்தோடு, கண்களில் சுமக்கும் இலட்சியத்தோடு, நச்சுக்குப்பிப் பின்னப்பட்ட கயிற்றையே பதக்கமாக அணிந்து எதிரியின் கோட்டையினை மண்ணோடு மண்ணாகத் தகர்த்து, தங்கள் புகழை இந்தப் புவியில் விதைத்துக் காற்றில் கலந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்.

தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக நம் இன மக்கள் இலட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாய் கொலை செய்யப்பட்டபோதுகூட அமைதி கலைக்காத இந்த உலகம் நமக்கென எப்படி நீதி செய்யும் என்கின்ற கேள்வி தமிழர்களாகிய எங்கள் மனதில் எப்போதும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இன அழிப்பு முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும், ஐ.நா. மன்றம் இதை ஒரு விசாரணையாகக்கூட எடுக்க மறுத்து புறந்தள்ளி வருகிறது. ஒரு இனப்படுகொலையைப் போர்க்குற்றம் எனவும், மனித உரிமை மீறல் எனவும், குறுகிய வட்டத்தில் அடைத்து எமது விடுதலைப் பாதையை உலக அரங்கு தடுத்து வருகிறது.

வரலாற்றில் வீதிகளில் யூதர்கள் எவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு, பிறகு மாபெரும் மீளெழுச்சி கொண்டு தொடர்ச்சியாகப் போராடி தங்களுக்கென ஒரு நாட்டினை அடைந்தார்களோ, அதேபோல தமிழர்களாகிய நாமும் வரலாற்றின் பாதையில் ஒரு மீள் எழுச்சி கொள்ளவேண்டிய ஒரு தேசிய இனமாக இருக்கிறோம். உலக அரசியல் ஒழுங்குகள் இன்று மாறிவிட்டன. கடந்த 2009 ற்குப் பிறகு உலக அரசுகளின் அரசியல் போக்குகள் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கின்றன.

இதையெல்லாம் சரியாகக் கணக்கெடுத்து நமது உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். தெற்கு சூடான், கிழக்கு தைமூர், பாலஸ்தீனம் என்றெல்லாம் புதிய நாடுகள் தோன்றிய வரலாறு நம் கண் முன்னால் பாடங்களாக இருக்கின்றன. பெரும் நம்பிக்கையோடு, திட்டமிடலுடன் கூடிய அறிவார்ந்த முறைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழர்களுக்கென இந்தப் பூமிப்பந்தில் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் பிறக்கும் என்பது உறுதி.

விடுதலைக் கனவை நோக்கிய நமது பாதையில் நமது மாவீரர் தெய்வங்கள் ஒளிதரும் விளக்குகளாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுவாசித்த மூச்சுக் காற்றைத்தான் அவர்களது உடன்பிறந்தவர்களாகிய நாமும் சுவாசிக்கிறோம் என்கின்ற உணர்வு மீண்டும் எழுவதற்கான மாபெரும் சக்தியினை நமக்கு வழங்குகிறது.

அழித்தொழிக்கப்பட்ட நமது அன்னை நிலமான தமிழீழ நாட்டினை , மாவீரர்கள் எந்தக் கனவிற்காகத் தங்கள் உயிரையும் விலையாக அளித்துப் போராடினார்களோ அந்தக் கனவு தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய ஒரு மாபெரும் கடமை இன்று உலகத் தமிழின இளையோர் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆண்டுகள் பல கடந்தாலும் மாவீரர்களின் தியாகமும் அவர்கள் சிந்தியக் குருதியும் நம் நினைவில் தாயக விடுதலைக் கனவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அந்த மகத்தான கடமையை உணர்ந்து தமிழின இளையோர் தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்டு இறையாண்மையுடன் கூடிய தமிழர்களுக்கென ஒரு விடுதலைத்தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாய் அனைவரையும் இந்தப் புனித நாளில் அன்போடு அழைக்கின்றேன். மாவீரர் சிந்திய குருதி! ஈழம் மீட்பது உறுதி என்று சீமான் வீரவணக்கம் செய்திருக்கிறார்.