5ம் வகுப்பு மாணவர்களை வன்கொடுமை செய்கிறதாம் தமிழக அரசு..! சீமான் சொல்றாருங்கோ

தமிழக அரசு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள நிலையில், அதனை வன்கொடுமை என்று வர்ணித்திருக்கிறார் சீமான். இது குறித்து அவர் பேசிய செய்தி இன்று வைரலாக பரவிவருகிறது.


கடந்த ஐந்தாண்டுகளில் 81 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் தேர்வை எதிர்கொள்ள அச்சம் அல்லது தேர்வு முடிவுகளில் வந்த தோல்வியே ஆகும். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் பெரும்பாலானோர் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள்தான்.

10, 12 ம் வகுப்பு படிக்கும் பதின்மப் பருவ மாணவர்களே மனமுதிர்ச்சியின்றித் தேர்வினால் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடக்கும் போது., அரசே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வை நடத்துவது எந்த வகையில் ஏற்புடையது..? அந்தத் தோல்வியை நம்முடைய குழந்தைகளின் பிஞ்சு மனங்கள் எப்படித் தாங்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழக அரசிடமும், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடமும் நாம் எழுப்பும் கேள்வி, இன்னும் இந்தியா முழுமைக்குமே அந்தச் சட்டம் வரையறுக்கப்பட்டுச் செயலாக்கத்திற்கு வருவதற்கு முன்பு, பிற மாநிலங்கள் எதுவுமே இன்னும் செயல்படுத்தாத போது, தமிழகத்தில் அவசர அவசரமாக 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை கொண்டு வருவதற்கான தேவை என்ன வருகிறது?

மூத்த மனநல மருத்துவர் ஐயா ருத்ரன் அவர்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை என்றே அதிகளவில் பெற்றொர்கள் தம்மிடம் அழைத்து வருவதாகக் கூறுகிறார். ஆகவே 6 வயது, 8 வயது பிள்ளைகளை வன்புணர்வு செய்வது எப்படி உடல்ரீதியாகச் சிதைக்குமோ அப்படியே இந்தத் தேர்வுகள் குழந்தைகளை மனரீதியாகச் சிதைக்கும்.

எனவே இதுவும் ஒரு வன்கொடுமைதான். இந்தத் தேசத்தை ஆளும் தலைவர்களில் யாராவது ஒருவர் கூறுங்கள், உங்களில் யார் 5 மற்றும் 8ஆம் வகுப்புத் தேர்வினை எழுதினீர்கள்? இந்த நாட்டில் எத்தனையோ மாமேதைகள் பேரறிஞர்கள் எல்லாம் 5ஆம் வகுப்பு 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வினை எழுதித்தான் வந்தார்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சீமான்.