இருபதாயிரம் தமிழர்களை இனப்படுகொலை செஞ்சிட்டாங்க..! ராஜபக்சே அறிவிப்புக்கு பொங்கியெழும் சீமான்

இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்ற புகார் எழுந்துகொண்டே இருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கோத்தபய ராஜபக்சே. அவரது அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார் சீமன்.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப்போரில் காணாமல்போன தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் அறிவிப்பு உலகத்தார் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது.

இறுதிக்கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெருமன்றம்வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் போராடி வருகிற நிலையில், இதுகுறித்து வாய்திறக்காது கள்ளமௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஈழ நிலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டப்பெண்கள் கணவனை இழந்து நிற்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள் என எவ்விதப் பேதமுமில்லாது தமிழர்கள் சிங்கள அரசின் கொத்துக்குண்டுகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

போர் விதிகளும், மரபுகளும் முற்று முழுதாகத் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இலங்கையை ஆண்ட சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையால் ஈழப்பெருநிலம் பெரும் அழிவைச் சந்தித்து உலகெங்கும் அகதியாக அலைகிற இழிநிலைக்குத் தமிழ்த்தேசிய இன மக்கள் தள்ளப்பட்டு நிற்கிறார்கள்.

கடந்த 2009 மே மாதம் நிகழ்ந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் 59 குழந்தைகள் உள்ளிட்ட பல நூறு பேர் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்தார்கள். அதற்கு முந்தைய, பிந்தைய காலகட்டங்களில் விசாரணை எனவும், புலிகள் இயக்கத்திற்குத் தொடர்புடையவர்கள் எனவும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைச் சிங்கள இனவாத அரசு கைதுசெய்து பிடித்துச்சென்றது.

எந்தவிதமான நீதி நெறிமுறைகளும், சனநாயக வழிகளும் பின்பற்றப்படாமல் பிடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழின மக்கள் குறித்து எவ்விதத் தகவலும் கிடைக்காத சூழலில் தங்களது சகோதர, சகோதரிகளை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மகன்களை, மகள்களை இழந்தவர்கள் எனச் சிங்கள அரசினால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழின இளைஞர்களைப் பறிகொடுத்த உறவுகள் கண்ணீர் மல்க வீதிகளில் இறங்கிப் போராடி வந்தார்கள்.

கடந்த சில வருடத்திற்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முன்பாகக்கூடத் தமிழின சொந்தங்கள் காணாமல்போன தங்களது உறவுகளின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு கதறி அழுத சம்பவங்களும் நடந்தன. இச்சூழலில் அவர்கள் மொத்தமாக இறந்துவிட்டதாக அலட்சியப்போக்கோடு அறிவித்து அதனை மிக எளிதாகக் கடந்து செல்ல முற்படும் இலங்கை அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என அறிவித்திருக்கும் கோத்தபய ராஜபக்சே, இத்தனை காலம் கழித்துத் தாமதமாகச் சொல்லியிருப்பதன் உள்நோக்க அரசியலை உலகத்தமிழ்ச்சமூகம் கேள்வி எழுப்புகிறது. காணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள்? யாரால் இறந்தார்கள்? அவர்களது உடல்கள் எங்கே? 

தமிழர்களைக் கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கி இருக்கிற இன்றைய அறிவிப்பு அத்தகைய தாயகத்தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு தமிழர்களது உணர்வினையும், போராட்டத்தினையும் மதித்து இலங்கையுடனான உறவை முறித்துக்கொண்டு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், சிங்கள அரசு செய்தத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தர வேண்டுமெனவும்,

பொது வாக்கெடுப்பை ஈழத்தமிழ்ச் சொந்தங்களிடம் நடத்தி தனித்தமிழீழம் அமைவதற்கான முன்னெடுப்பினை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், இந்தியக் குடிமகன் எனும் உணர்வே அற்றுப்போய்த் தீரா வன்மமும், ஆறா கோபமும் தமிழ் இளைய தலைமுறைப்பிள்ளைகளின் நெஞ்சிலே தங்கி அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கிறேன் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.