வெளியே சூதாடினால் தப்பு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஆதரவா..? சீமான் ஆவேசம்

இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்திருக்கிறார்.


அண்மைக்காலமாகத் தமிழ் சமூகத்திற்கு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இளைய தலைமுறையினரின் எதிர்கால நல்வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், பேராபத்தாகவும் மாறிவிட்டது இணையவழி நிகழ்நிலை (ஆன்லைன்) சூதாட்டங்கள். தமிழகத்தில் லாட்டரி உட்படப் பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்கள் சட்டப்படி குற்றமென்று தடை செய்யப்படுள்ளன. அவற்றில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

ஆனால் அதே ரம்மி போன்ற சூதாட்டங்கள் இணையம் மூலமாக தமிழகம் முழுவதும் எவ்வித தடையுமின்றி நடைபெறுகிறது. வெளிப்படையாகப் பிரபலங்கள் மூலம் எவ்வித தயக்கமுமின்றி விளம்பரமும் செய்கின்றனர். தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்யும் அளவுக்குப் பெரும்பணபுழக்கமுள்ள தொழிலாக மாறிவிட்டன இந்த நிகழ்நிலை சூதாட்டங்கள்.

இதனால் பொருள் இழப்பு, விலைமதிப்பற்ற நேர இழப்பு மட்டுமின்றி எதிர்கால முன்னேற்றத்திற்கான இலக்கை நோக்கிய பயணத்திலிருந்து இளைய தலைமுறையினரை மடைமாற்றி அவர்களது நற்சிந்தனையைச் சிதைக்கிறது. இறுதியில் மன அழுத்த்திற்கு ஆளாக்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு இளைஞர்களின் வாழ்வினையே பாழ்படுத்திவிடுகிறது.

இதை உணர்ந்துதான் கடந்த சூலை மாதம் 24 ம்தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதியரசர் புகழேந்தி, தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே இந்த இணையவழி சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்திய முழுவதும் இணைய வழி சூதாட்ட ரம்மி விளையாட்டிற்குத் தடைவிதிக்க மத்திய , மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித உத்தரவோ, அறிவிப்போ வெளியிடாதது ஆட்சியாளர்களும் இந்தச் சூதாட்டங்களுக்கு உடந்தையோ என்கின்ற ஐயத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

பாலியல் சீண்டல்கள் இணையம் வாயிலாக நடந்தாலும் தண்டணைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு எப்படிச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதுபோல் சூதாட்டங்கள் நடைமுறை வாழ்வில் மட்டுமின்றி இணையம் வாயிலாக நிகழ்ந்தாலும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டுச் சட்டநடவடிக்கைகள் எடுக்கும் வகையில் அவசர சட்டத்தினைக் கொண்டுவர வேண்டும்.

இவைகள் தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மேலும் குழந்தைகள் தொடர்பான ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது போல் இளைஞர்களைக் குறி வைக்கும் இதுபோன்ற சூதாட்டச் செயலிகளையும் தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.