குளத்திற்குள் பாய்ந்த பள்ளிக் கூட வேன்! 11 குழந்தைகளை காப்பாற்றி 9 குழந்தைகளுடன் நீரில் மூழ்கிய ஆசிரியை சுகந்தி! வருசம் 10 ஆச்சு, ஆனால்?

நாகை மாவட்டத்தில் 9 பள்ளிக் குழந்தைகளுடன் நீரில் மூழ்கியதின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் பொதுமக்களால் அனுசரிக்கப்பட்டது.


சரியாக 10 ஆண்டுகள் ஆகிவிட்டது பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிந்த சம்பவம் இன்னும் கிராம மக்கள் மனதில் இருந்து விலகவில்லை. 20 குழந்தைகள் நீரில் மூழ்கிய நிலையில் 11 குழந்தைகளை காப்பாற்றிவிட்டு, 9 குழந்தைகளை காப்பற்ற முடியாமல் அவர்களுடன் சேர்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் தியாகத்திற்கு பெயர்போன ஆசிரியை சுகந்தி. 

நாகை மாவட்டம் நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், அன்னலட்சுமி தம்பதியின் மகள் சுகந்தி ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, 2009ம் ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். 2009 டிசம்பர் 3ஆம் தேதி பள்ளிக்கு சொந்தமான வேன் 20 குழந்தைகள் மற்றும் ஆசிரியை சுகந்தியுடன் சென்றுகொண்டிருந்த போது பனையடிகுத்தகை கோவில் குளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த குளத்தில் அனைவரும் நீரில் மூழ்கினர்.  

எனினும் தன்னை சுதாரித்துக்கொண்ட ஆசிரியை சுகந்தி தன்னந்தனியாக போராடி நீரில் மூழ்கிய 11 குழந்தைகளை கரையேற்றி காப்பாற்றினார். மேலும் 9 குழந்தைகளை காப்பாற்ற குளத்தில் இறங்கியபோது நீரில் மூழ்கினார். அவருடன் சேர்ந்து 9 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சுகந்தி மற்றும் இறந்துபோன பள்ளி குழந்தைகளின் நினைவாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நினைவு மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டது. விபத்து நடந்து சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில் நினைவு மண்டபத்தில் நாகை மக்கள் மக்கள் நினைவுதினம் அனுசரித்தனர்.