மாமன் மகனுடன் சைக்கிளில் சென்ற சிறுமி! அதிவேகத்தில் வந்த ஸ்கூல் பஸ்! கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோரம்!

தருமபுரி மாவட்டத்தில் தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 7ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேத்துரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த நித்யா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவியும் சபரி என்ற 5ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காலையில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர். 

சைக்கிளை சிறுமி நித்யா ஓட்டிச்செல்ல பின்னால் சபரி அமர்ந்து இருந்தார். வேப்பிலைப்பட்டி என்ற இடத்தில் இவர்கள் சென்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவி நித்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த மாணவன் சபரி படுகாயம் அடைந்தார்.

முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபரி ஆபத்தான நிலையில் உள்ளதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்று பேருந்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து நடந்த பகுதியில் வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதாகவும் செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

தகவல் அறிந்து வந்த தருமபுரி உதவி ஆட்சியர் சிவன் அருள், அரூர் கோட்டாட்சியர் புண்ணியக்கோடி, அரூர் டி.எஸ்.பி. செல்ல பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.