சத்யபிரதா சாகு ஒரு தபால்காரர் தான்! நீதிபதிகளை அதிர வைத்த தேர்தல் ஆணையம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒரு தபால்காரர் தான் என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்.


மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் சென்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினர்.  அவர்கள் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு: தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதுவது மட்டும்தான் தலைமைத் தேர்தல் அதிகாரியின் அதிகாரமா? Free and Fair election என்பதற்கு எல்லோரும் மையத்திற்குள் சென்று வரலாம் என்பதுதான் அர்த்தமா?  

யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்றால் பாதுகாப்பே இல்லை என்றுதான் அர்த்தம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட ஆட்சியர் தினமும் சென்றாரா? நேர்மையான தேர்தலை நடத்துவதாக கூறும் ஆணையம் இதிலும் அப்படித்தானே செயல்பட்டிருக்க வேண்டும்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகளை இனி நீதிமன்றமும் கண்காணிக்கும். என்று சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தமிழக தலைமை தேர்தல் அதிகார் சத்யபிரதா சாகு ஒரு தபால்காரர் போலத்தான் செயல்பட முடியும். தமிழக தேர்தல் விவகாரங்களை டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசிடம் கூற மட்டுமே முடியும் என்று வழக்கறிஞர் கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள் ஒரு கனம் அதிர்ந்து போயினர்.