உமாபாரதியை கட்டிப் பிடித்து கதறிய சாத்வி! போபால் பாஜக வேட்பாளருக்கு நேர்ந்த பரிதாபம்!

போபால் தொகுதியில் போட்டியிடும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா மத்திய அமைச்சர் உமா பாரதியை கட்டி அணைத்து கதறியுள்ளார்.


வட மாநிலங்களில் தற்போதைய ஹாட் டாபிக் சாத்வி பிரக்யா தான். குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார் சாத்வி. காவித் தீவிரவாதி என்று பட்டம் குத்தப்பட்ட இவருக்கு தான் போபால் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது பாஜக.

இந்த நிலையில் சாத்வியை மத்திய அமைச்சர் உமா பாரதியுடன் ஒப்பிட்டு சில பாஜக தலைவர்கள் பேசியிருந்தனர். அரசியலுக்கு வந்துள்ள புதுமுகமான சாத்வியுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதை உமாபாரதி ஏற்கவில்லை. இதனால் சாத்வி ஒரு மிகப்பெரிய ஆத்மா என்று வஞ்சப்புகழ்ச்சி செய்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த உமா பாரதியை நேருக்கு நேராக சாத்வி சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது உமா பாரதி ஏதோகூற உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பெண் சாமியார் சாத்வி அவரை கட்டிப் பிடித்து கதற ஆரம்பித்தார்.

அவரை உமா பாரதி சமாதானப்படுத்தினார். பின்னர் கைக்குட்டையால் கண்ணீரை துடைத்து விட்டு பிரக்யா சிங் காரில் புறப்பட்டுச் சென்றார். பிரக்யாவை சிறந்த புனிதர் என்றும் தாமெல்லாம் முட்டாள் படைப்பு என்றும் உமா பாரதி ஏற்கெனவே வஞ்சப் புகழ்ச்சி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.