படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

டாய்லெட் பெட் கண்டுபிடித்து உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் சரவணமுத்து.


நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் சரவணமுத்து. மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் மேற்கொண்டு படிக்க இயலாமையால் தந்தையுடன் ஒர்க்ஷாப்பிற்க்கு வேலைக்குச் சென்றார். தற்போது நாகர்கோயிலில் வசிக்கும் இவர் கிருஷ்ணம்மா என்ற தனது மனைவிக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு விஞ்ஞானியாக உருவெடுத்தார்.

கருப்பை அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிருஷ்ணம்மாவால் எழுந்து நடக்க முடியாமல் போனது. இதனால் படுத்த படுக்கையான அவரை தினமும் சரவணமுத்து தான் கழிவறைக்கு தூக்கி செல்வார்.தனது மனைவிக்கு தற்காலிக பாதிப்பு தான் என்ற போதிலும் உலகம் முழுவதும் இதுபோல் படுத்தபடுக்கையாக இருப்பவர்களின் நிலை என்ன என்று அவர் யோசித்தார். இதன் காரணமாக உருவானதுதான் டாய்லெட் பெட்.

பட்டறையில் வேலை பார்க்கும் சரவணமுத்து சென்னையை சேர்ந்த குருமூர்த்தி என்பவரின் உதவியால் டாய்லெட் பெட் என்ற அற்புதமான கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். இந்த படுக்கையில் ஒரு பொத்தானை அமுக்கினால் ஒரு கோப்பை தோன்றும். அந்தக் கோப்பையில் கழிவுகள் வெளியேறிய பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்படும். அதில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு அந்த உபகரணத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவரது கண்டுபிடிப்பை பாராட்டி நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் என்ற அமைப்பு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. இவரது கண்டுபிடிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டி விருது வழங்கி உள்ளார். இத்தனைக்கும் சரவணமுத்து படித்தது வெறும் மூன்றாம் வகுப்பு மட்டுமே.

உலகம் முழுவதும் தற்போது சரவண முத்துவுக்கு பாராட்டு குவிந்து வருவதுடன் டாய்லெட் பெட் செய்து கொடுப்பதற்கு 675 ஆர்டர்களும் கிடைத்துள்ளன. இது ஒன்றை தயாரிக்க ஆகும் செலவு 61 ஆயிரம் ரூபாய் என்று சரவணமுத்து தெரிவித்துள்ளார். ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் டாய்லெட் பெட் தயாரிக்கும் கண்டுபிடிப்பில் தற்போது அவர் இறங்கியுள்ளார்.